தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் கோடை பருவ அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.325 வரை கட்டாயமாகக் கையூட்டு பறிக்கப்படும் கொடுமை இன்னும் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உணவு அமைச்சர் மேற்கொண்ட கள ஆய்விலேயே கையூட்டு வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க அரசுத் தரப்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது கவலையளிக்கிறது.
காவிரி பாசன மாவட்டங்களில் 1.60 லட்சம் ஏக்கரில் கோடை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வது தான் உழவர்களுக்கு பெரும் துயரமாக மாறியிருக்கிறது. ஒருபுறம் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால், உழவர்கள் தங்களில் நெல்லை விற்பனை செய்வதற்கு ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம் கொள்முதல் நிலையங்களில் ஊழல் தொடர்கிறது.
40 கிலோ எடை கொண்ட நெல் மூட்டையை எடை வைத்து கொள்முதல் செய்வதற்கு கையூட்டாக ரூ.40 முதல் ரூ.60 வரை உழவர்கள் தர வேண்டியுள்ளது. இது தவிர ஒவ்வொரு மூட்டைக்கும் நிர்ணயிக்கப்பட்ட எடையான 40 கிலோவுக்கு பதிலாக கூடுதலாக எடை வைத்து கொள்முதல் செய்வதன் வாயிலாகவும், பதர்களைத் தூற்றுவதாகக் கூறி ஒன்றரை கிலோ வரையிலான நெல்லை ஒதுக்குவதன் வாயிலாகவும் 3 கிலோ நெல் கூடுதலாக வாங்கப்படுவதாக உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த வகையில் மட்டும் ஒரு குவிண்டாலுக்கு ரொக்கமாக ரூ.150, நெல்லாக ரூ.175 என மொத்தம் ரூ.325 கையூட்டாக பறிக்கப்படுகிறது. தனியார் வணிகர்களை விட அரசு கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.500 முதல் ரூ.600 வரை கூடுதல் விலை கிடைக்கிறது என்பதால் தான் அரசு கொள்முதல் நிலையங்களைத் தேடி உழவர்கள் வருகிறார்கள். அதற்காக அவர்களை வாரக் கணக்கில் காத்திருக்க வைப்பதும், குவிண்டாலுக்கு ரூ.325 வரை கையூட்டாக பறித்துக் கொள்வதும் பெரும் அநீதி. இதே நிலை தொடர்ந்தால் உழவர்கள் தனியார் வணிகர்களிடம் நெல்லை விற்கத் தயாராகி விடுவார்கள்.அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நியாயவிலைக் கடைகளில் வழங்குவதற்கு அரிசியே கிடைக்காத நிலை உருவாகி விடும்.
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தமிழக அரசு மறுக்க முடியாது. சில நாள்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் இது குறித்து ஆய்வு செய்த உணவுத் துறை அமைச்சர், நெல் விற்பனை செய்த உழவர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார். கொள்முதலுக்காக கையூட்டு ஏதேனும் கொடுத்தீர்களா? என்று அமைச்சர் கேட்டபோது, எதிர்முனையில் இருந்த உழவர் முட்டைக்கு ரூ.50 கையூட்டு கொடுத்ததாக தெரிவிக்கிறார். இதைத் தொடர்ந்து உழவரிடம் கையூட்டு வாங்கிய கொள்முதல் நிலைய எழுத்தரை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் ஆணை பிறப்பிக்கிறார். இவற்றைப் பார்க்கும் போது நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடப்பதைத் தடுக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புவதை புரிந்து கொள்ள முடிகிறது. அது வரவேற்கத்தக்கது. ஆனால், கொள்முதல் நிலைய ஊழலுக்கான காரணங்களை கண்டுபிடித்து சரி செய்யாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக கடைநிலை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்வதால் ஊழல் ஒழியப்போவதில்லை; உழவர்களும் பயனடையப் போவதில்லை.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து கையூட்டு வழங்கப்படுவதற்கு கொள்முதல் நிலையப் பணியாளர்கள் தரப்பில் சில நியாயங்கள் கூறப்படுகின்றன. நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை; பணியாளர்களுக்கு போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் தவிர்க்க முடியாத செலவுகளுக்காக நிரந்தர முன்வைப்புத் தொகையாக ஒவ்வொரு நிலையத்திற்கும் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், அந்தத் தொகை முறையாக வழங்கப் படவில்லை. அதே போல், நெல் எடை போடும் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.10 மட்டுமே கூலியாக வழங்கப்படுவது போதுமானது அல்ல என்றெல்லாம் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கூறுவதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இதை சரி செய்தால் மட்டும் தான் கொள்முதல் நிலைய ஊழலை ஒழிக்க முடியும்.
நெல் கொள்முதல் நிலைய கையூட்டு கலாச்சாரம் புதிதாக தோன்றியதில்லை. பல ஆண்டுகளாகவே இந்த சுரண்டல் தொடர்கிறது. இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் உழவர்கள் வாக்களித்தனர். அவர்களின் விருப்பத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களை தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
