இந்தியா தலைமையில் உயிரித் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட அடுத்த தொழிற்புரட்சிக்கு நாடு தயாராக உள்ளது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

உயிரி-மருத்துவ ஆராய்ச்சி பணித் திட்டத்தின் மூன்றாம் கட்ட செயல்திட்டத்தை மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ 1,500 கோடியாகும். இதில் உயிரித் தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பாக ரூ 1,000 கோடியும், லண்டனைச் சேர்ந்த ‘வெல்கம் டிரஸ்ட்’ அமைப்பின் பங்களிப்பாக ரூ 500 கோடியும் ஆகும்.

இத்திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், உலகளவிலான போட்டித்தன்மை ஆகியவற்றில் உயிரித் தொழில்நுட்பம் ஒரு முக்கிய சக்தியாக அமையவுள்ளது என்று குறிப்பிட்டார். உயிரித் தொழில்நுட்பப் புரட்சியில், இந்தியா பங்கேற்பாளராக மட்டுமின்றி, வளர்ந்து வரும் முன்னணி நாடாகவும் திகழ்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இத்துறையில் ஏற்பட்டுள்ள விரைவான மாற்றத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்தியாவின் உயிரிப் பொருளாதாரம் 2014-ல் 10 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், 2025-ல் 195 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது என்றும், 2030-ல் இது 300 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தற்போது, இந்தியாவில் 12,000 உயிரித் தொழில்நுட்பத் புத்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாகவும், உலகளவில் உயிரித் தொழில்நுட்ப மையமாகத் தனது நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய உயிரித் தொழில்நுட்பத் துறை, இங்கிலாந்தின் வெல்கம் டிரஸ்ட் ஆகியவை இணைந்து ‘உயிரித் தொழில்நுட்பத் துறை-வெல்கம் டிரஸ்ட் இந்தியா கூட்டமைப்பு’மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.

Leave a Reply