ரயில் நிலைய மேலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பாதுகாப்பான ரயில் இயக்கத்தை உறுதி செய்வதற்கான விரிவான வழிமுறைகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே உயர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
ரயில் நிலைய நடவடிக்கைகளில் விரைவான முடிவுகளை எடுக்கவும், பயணியர் சேவைகளை மேம்படுத்தவும் நிலைய மேலாளர்களுக்குக் கூடுதல் நிர்வாக, செயல்பாட்டு அதிகாரங்களை வழங்குவது குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதிக ரயில் போக்குவரத்து உள்ள வழித்தடங்களில் கூடுதல் நிலைய மேலாளர்களை நியமிக்கவும், காலிப் பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் விரைவாக நிரப்பவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
செயல்பாட்டுத் திறனை அதிகரிக்க மொபைல் செயலி அடிப்படையிலான காகிதமில்லா பணி முறை, ஒருங்கிணைந்த ரயில் நிலைய மேலாண்மை அமைப்பு ஆகிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மெய் நிகர் முறையில் நவீன பயிற்சி அளிப்பதுடன், உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ரயில் நிலைய மேலாளர்களின் நிதி அதிகாரங்களை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பெண் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திவாஹர்
