கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சருமான D.K.சிவகுமார், தனது சில்லறைச் சேட்டைகளை சித்தராமையாவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தனது முதலமைச்சர் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அதிகார வெறிபிடித்து; இந்திய இறையாண்மைக்கும், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டு மக்களின் பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் “மேகதாது அணை” விவகாரத்தில் வாய்க்கு வந்தபடியெல்லாம் சட்ட விரோதமாக பேசிக் கொண்டிருந்தால், அதை தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டார்கள்!
உமது சட்ட விரோதமான பேச்சையும், செயல்பாட்டையும், உமது ஆட்டத்தையும் சட்டப்படி எப்படி அடக்க வேண்டும்; கர்நாடக மாநில மக்களிடம் இருந்து உம்மை எப்படி அரசியல் அனாதையாக ஆக்க வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் அதிகாரப் போட்டியையும்; உங்களின் உட்கட்சி விவகாரங்களையும் கர்நாடக மாநில மக்களிடமிருந்து திசை திருப்புவதற்காக’ தமிழ்நாட்டு மக்களின் உணர்விலும், நதிநீர் உரிமையிலும் சட்டவிரோதமாக தலையிடுவதை ஒரு காலமும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
உங்களின் பதவிப் வெறிக்காக இரு மாநில மக்களின் நிம்மதியை சீர்குலைக்க நினைப்பது சட்ட விரோதம் மட்டுமல்ல; இந்திய இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் செயலாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டிய பொறுப்பானப் பதவியில் இருக்கும் D.K. சிவகுமார், கேவலம், அரசியல் ஆதாயத்திற்காக மேகதாது அணை விவகாரத்தில் சட்ட விரோதமாக தொடர்ந்துப் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல! ஒரு தனி மனிதனின் இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகள், இரு மாநில மக்களின் நிம்மதியையும், பொது அமைதியையும் கெடுப்பதாக அமைந்துவிடும்.
எனவே, கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் D.K. சிவகுமாரின் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை உடனே கண்டிக்க வேண்டும்; தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு சாதகமாக செயல்படுங்கள் என்று காங்கிரஸ் தேசிய தலைமைக்கு நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை! காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்படி நடந்து கொள்ளுங்கள் என்றுதான் எச்சரிக்கிறோம்.
வழக்கம்போல “பாம்புக்கு தலையையும்; மீனுக்கு வாலையையும் ஆட்டுவதை” நிறுத்திவிட்டு, காங்கிரஸ் தேசிய தலைமை அறத்தின் பக்கம் தங்களது பார்வையை ஆழமாகப் பதிக்க வேண்டும்.
உலகத்தில் நடுநிலைமை என்று ஒன்று கிடையாது. ஒன்று தர்மத்தின் பக்கம் துணிந்து நிற்க வேண்டும்! இல்லையென்றால், அதர்மத்திற்கு துணைப் போக வேண்டும். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA TEAM.
