கடல்சார் உணவுத் துறை வளர்ச்சியை விரைவுபடுத்துவது குறித்து, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் தலைமையிலான உயர்நிலைக் கூட்டம்.

இந்தியாவின் கடல்சார் உணவுத் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், ஏற்றுமதியில் உலகளவிலானப் போட்டித்திறனை வலுப்படுத்துவதற்கும், செயல்திட்டம் ஒன்றை வகுப்பது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்  இடையேயான உயர்நிலைக் கூட்டுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வர்த்தகத் துறை, மீன்வளத் துறை, எம்பிஎப்ஐ, தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு வாரியம், கடல்சார் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஏற்றுமதி சோதனைக் கவுன்சில் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய திட்டங்களின் நோக்கங்களுடன் ஏற்றுமதி மேம்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை இக்கூட்டம் வலியுறுத்தியது.

மதிப்புக் கூட்டல், உள்கட்டமைப்பு மேம்பாடு, தயாரிப்புப் பன்முகப்படுத்தல், தர உறுதி, சந்தை விரிவாக்கம், ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்கேற்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு ஒருங்கிணைந்த உத்திசார் நடவடிக்கை மூலம் கடல்சார்  உணவு ஏற்றுமதியின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான தங்களது உறுதியான நிலைப்பாட்டை இரு அமைச்சகங்களும் மீண்டும் வலியுறுத்தின.

இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம், கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம், மாநில மீன்வளத் துறைகள், கடல் உணவு ஏற்றுமதியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பிற தொழில்துறையினரின் பங்கேற்புடன், அமைச்சகங்களின் இரண்டு நாள் “சிந்தனை முகாம்” 2026 ஜூன் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply