இந்திய விமானப்படையின் தலைமையக கட்டளைப் பிரிவு விமானப்படை மற்றும் உத்திசார் ஆய்வு மையத்துடன் இணைந்து 2026 மே 11 அன்று நாக்பூரில் ஒருநாள் கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தியது. திறன்மிக்க பராமரிப்பு மற்றும் விமானப்படை ஆற்றலின் தற்சார்பு கூறுகள் என்ற கருப்பொருளில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் வான்வெளித் திறனை மேம்படுத்துவதில் பராமரிப்புத் திறன், தற்சார்பு ஆகியவற்றின் முக்கியப் பங்களிப்புக் குறித்து விவாதிக்கப்பட்டது. ராணுவ உயர் தலைவர்கள் துறைசார் நிபுணர்கள் மற்றும் சிறப்பு பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கிற்கு விமானப் பராமரிப்புக் கட்டளைப் பிரிவின் தலைமை தளபதி ஏர் மார்ஷல் யல்லா உமேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், செயல் நடவடிக்கையின் தயார் நிலைக்கும் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் வலுவான பராமரிப்புக் கட்டமைப்புகள் மற்றும் உள்நாட்டு திறனின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
வான்வெளி அமைப்புகளில் தற்சார்பை அடைவது, மீள்திறனை உறுதி செய்வதற்கும் வெளி ஆதாரங்களை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் அவசியம் என்று கூறினார்.
நாட்டின் விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கத்தில் வளர்ச்சியடைந்து வரும் பராமரிப்பு நடைமுறைகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள், உள்நாட்டு மயமாக்கலுக்கான முயற்சிகள் மற்றும் கொள்கை கட்டமைப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட நுண்ணறிவுமிக்க விளக்கக் காட்சிகள் மற்றும் குழு விவாதங்கள் இக்கருத்தரங்கில் நடைபெற்றன. இக்கருத்தரங்கு அறிவுசார் பரிமாற்றத்திற்கு ஒரு மதிப்பு வாய்ந்த தளத்தை அளித்ததுடன் உத்திசார்ந்த சிந்தனையாளர்களுக்கும் செயல்பாட்டாளர்களுக்கும் இடையே ஆழ்ந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது.
தேசிய நோக்கங்களுக்கு ஆதரவாக புதிய அணுகுமுறைகளைக் கடைபிடிப்பதிலும் இந்திய விமானப்படையின் பராமரிப்பு கட்டளையகத்தின் உறுதிப்பாட்டை இது உறுதி செய்தது.
வான்வெளி பராமரிப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் உத்திசார் குழுக்களுக்கும் ஆயுதப்படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான தீர்மானத்துடன் கருத்தரங்கம் நிறைவடைந்தது.
எம்.பிரபாகரன்
