நாட்டில் 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கையிருப்பில் உள்ளது!– மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

மேற்காசியாவில் நிலவும் சூழல் குறித்து விவாதிப்பதற்காக முறைசாரா அமைச்சர்கள் குழுவின் 5-வது கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று தலைமை தாங்கினார். அங்கு நிலவும் மோதலில் தற்போதைய சூழல் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

நாடு தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் பெட்ரோலியப் பொருட்கள் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவிடம் 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெயும், இயற்கை எரிவாயுவும் 45 நாட்களுக்குத் தேவையான எல்பிஜி சிலிண்டரும் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்நியச் செலாவணி கையிருப்பு 703 பில்லியன் டாலர் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உலகின் 3-வது மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நாடாகவும், நான்காவது மிகப்பெரிய பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் திகழும் இந்தியா 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும்  உள்நாட்டுத் தேவை போதிய அளவில்  உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் செலவு அதிகரிப்பதாகவும் எரிசக்தி பாதுகாப்பு மூலம் இதை தவிர்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

விநியோகத் தடைகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் திரு ராஜ்நாத் சிங் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

Leave a Reply