மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் வெள்ளம் மற்றும் வெப்ப அலைகளைச் சமாளிப்பதற்கான நாட்டின் தயார்நிலை குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வெள்ளம் மற்றும் வெப்ப அலைகளைச் சமாளிப்பதற்கான நாட்டின் தயார்நிலை குறித்து புதுதில்லியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆதரவுடன் ஜம்மு காஷ்மீர், லடாக், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளில் உள்ள அதிக அபாயம் நிறைந்த 30 ஏரிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புமுறையை உருவாக்கும் திட்டத்தில், குறைந்தபட்சம் 60 ஏரிகளையாவது சேர்க்க வேண்டும் என்று கூறினார். மேலும், மத்திய மற்றும் மாநில அளவில் வெள்ள முன்னறிவிப்புக்கான ஒருங்கிணைந்த அமைப்புமுறையை அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் வெள்ள நெருக்கடி மேலாண்மைக் குழுக்கள் (FCMTs) அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்று திரு அமித் ஷா கூறினார்.  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள், சிறந்த விழிப்புணர்வுக்கும் அரசின் முழுமையான அணுகுமுறையின் வளர்ச்சிக்கும் வழிவகுத்துள்ளன என்றும், ஆனால் மாநில, மாவட்ட மற்றும் நகராட்சி மட்டங்களில் இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை மறுஆய்வு செய்வது அவற்றின் செயலாக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், உயிரிழப்புகள் இல்லாத பேரிடர் மேலாண்மை என்ற தொலைநோக்குப் பார்வையைச் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். நீர் சேமிப்பு மற்றும் தடுப்பணைத் திட்டங்கள் மூலம் நீர் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆறுகளில் தடுப்பணைகளைக் கட்டுவதன் மூலம் நீரைச் சேமிப்பதும், அதே நேரத்தில் வெப்ப அலைகளின் தாக்கத்தைக் குறைப்பதும் நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

Leave a Reply