நாட்டில் மின்னணு சுங்கக் கட்டண முறையை மாற்றுவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), குஜராத்தில் உள்ள NH-48 நெடுஞ்சாலையின் சூரத்-பரூச் பிரிவில் அமைந்துள்ள சோராயசி சுங்கச்சாவடியில், பலவழி தடையற்ற போக்குவரத்து (MLFF) அடிப்படையிலான சுங்கக் கட்டண முறையை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. இந்த முறை செயல்படுத்தப்பட்ட முதல் நாளில், சுமார் 41,500 வாகனங்கள் இந்த MLFF சுங்கச்சாவடியைக் கடந்து சென்றன.
MLFF கட்டமைப்பு, குறைந்தபட்ச மனிதத் தலையீட்டுடன் தடையற்ற சுங்கக் கட்டண முறையை அறிமுகப்படுத்துகிறது. இது வாகனங்கள் நிறுத்தாமல் சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லவும், தடையற்ற போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்யவும் உதவுகிறது. இந்த அமைப்பு, தானியங்கி வாகனப் பதிவு எண் அங்கீகாரம் (ANPR) மற்றும் FASTag அடிப்படையிலான மின்னணு சுங்கக் கட்டண வசூல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தானியங்கி மற்றும் தொடுதலில்லாத சுங்கக் கட்டண வசூல் செயல்பாடுகளைச் செயல்படுத்துகிறது. MLFF, தேசிய நெடுஞ்சாலைப் பயனர்களின் பயண அனுபவத்தில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவருகிறது; இது செயல்திறனையும் வசதியையும் கணிசமாக மேம்படுத்துகிறது. இது தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைத்து, பயண நேரத்தை மேம்படுத்தி, எரிபொருள் சிக்கனத்தை அதிகரித்து, வாகனப் புகை வெளியேற்றத்தையும் குறைக்கும்.
தடையற்ற பயண அனுபவத்திற்காக, தேசிய நெடுஞ்சாலைப் பயனர்கள் தங்கள் ஃபாஸ்டேக் கணக்குகளில் போதுமான இருப்பைப் பராமரிக்குமாறு NHAI வலியுறுத்தியுள்ளது. ஃபாஸ்டேக் இருப்புப் பற்றாக்குறை, செல்லாத அல்லது செயல்படாத ஃபாஸ்டேக் போன்ற சூழ்நிலைகளில், பயனர் கட்டணம் செலுத்தாததற்காகப் பயனர்களுக்கு மின்னணு அறிவிப்பு (E-Notice) வழங்கப்படும். அத்தகைய பயனர்கள், மின்னணு அறிவிப்பு வந்த 72 மணி நேரத்திற்குள் வழக்கமான பயனர் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். 72 மணி நேரத்திற்குப் பிறகும் செலுத்தத் தவறினால், வாகனப் பிரிவின் வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்கு பயனர் கட்டணம் வசூலிக்கப்படும். https://nhfeenotice.parivahan.gov.in/#/ என்ற பிரத்யேக இணையதளம் மூலம் மின்னணு அறிவிப்புகளைப் பெற்று அதற்கான கட்டணத்தைச் செலுத்தலாம் . பயனர்கள் மின்னணு அறிவிப்பு வழங்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள் தங்கள் குறைகளையும் எழுப்பலாம். மின்னணு அறிவிப்புகளுக்குக் கட்டணம் செலுத்தத் தவறினால், ஃபாஸ்டேக் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படலாம் மற்றும் VAHAN தளம் மூலம் வழங்கப்படும் பிற வாகனச் சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
MLFF-இன் அறிமுகம், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதன் மூலமும், சுங்கச்சாவடிகளை அமைப்பதற்கான செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பதன் மூலமும், சுங்கச்சாவடி நடவடிக்கைகளை வலுப்படுத்த உதவும். மேலும், தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பு முழுவதும் மிகவும் வலுவான, திறமையான மற்றும் செலவு குறைந்த ஒரு சுங்கச்சாவடி சூழலமைப்பை உருவாக்குவதற்கும் MLFF பங்களிக்கும்.
திவாஹர்
