இந்திய அரசு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் மூலம், 1955 ஆம் ஆண்டின் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ், ‘ இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விநியோகம் (குழாய்கள் மற்றும் பிற வசதிகளை அமைத்தல், கட்டுதல், இயக்குதல் மற்றும் விரிவாக்குதல் மூலம்) ஆணை, 2026′-ஐ அறிவித்துள்ளது. இந்த ஆணை, நாடு முழுவதும் குழாய்களை அமைப்பதற்கும் விரிவாக்குவதற்கும் ஒரு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் காலவரையறைக்குட்பட்ட கட்டமைப்பை வழங்குகிறது ; ஒப்புதல்கள் மற்றும் நிலம் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைக் களைந்து, குடியிருப்புப் பகுதிகள் உட்பட இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
இந்திய சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த ஆணை, உடனடியாக அமலுக்கு வருகிறது. இது, திறமையான எரிவாயு விநியோகம், விரைவான உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் தூய்மையான எரிசக்திக்கான சமத்துவமான அணுகல் ஆகியவற்றுக்காக ஒரு விரிவான, வெளிப்படையான மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த கட்டமைப்பை நிறுவுகிறது.
இந்த ஆணை, குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) வலையமைப்புகளின் விரிவாக்கத்திற்கு வழிவகுப்பதையும், கடைநிலை இணைப்பை மேம்படுத்துவதையும், சமையல், போக்குவரத்து மற்றும் தொழில்துறை தேவைகளுக்காகத் தூய்மையான எரிபொருட்களை நோக்கிய மாற்றத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம், இது எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, இந்தியா எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி மாறுவதற்கும் ஆதரவளிக்கிறது.
கொள்கைக்கான நியாயம்
இந்தியாவின் அதிகரித்து வரும் எரிசக்தித் தேவையும், மாறிவரும் உலகளாவிய எரிசக்திச் சூழலும், மீள்திறன் கொண்ட, பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் திறமையான ஒரு எரிசக்தி அமைப்பை அவசியமாக்குகின்றன. இந்த ஆணை, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் உள்ள நீண்டகால சவால்கள், ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மை மற்றும் ஒப்புதல்களில் ஏற்படும் தாமதங்கள் ஆகியவற்றை நிவர்த்தி செய்வதோடு, இயற்கை எரிவாயுவை ஒரு முக்கிய மாற்றக்கால எரிபொருளாகவும் நிலைநிறுத்துகிறது.
அடிப்படையில், இந்த சீர்திருத்தமானது நடைமுறைகளை எளிமையாக்குவதன் மூலமும், ஒழுங்குமுறைத் தடைகளைக் குறைப்பதன் மூலமும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்குக் கணிக்கக்கூடிய மற்றும் வெளிப்படையான செயல்பாட்டுச் சூழலை உருவாக்குவதன் மூலமும், வணிகம் செய்வதை மிகவும் எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
- வெளிப்படையான மற்றும் கணிக்கக்கூடிய ஒழுங்குமுறை கட்டமைப்பு
- குழாய் உள்கட்டமைப்பை அமைத்தல், கட்டுதல், இயக்குதல் மற்றும் விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கான தெளிவான, சீரான கட்டமைப்பை நிறுவுகிறது.
- தரப்படுத்தப்பட்ட செயல்முறைகளையும் காலக்கெடுகளையும் அறிமுகப்படுத்தி, தெளிவின்மையையும் நிர்வாகத்தின் தன்னிச்சையான முடிவெடுக்கும் அதிகாரத்தையும் குறைக்கிறது.
- வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான பெரும் ஊக்கம்
- செயல்முறை தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, அனுமான ஒப்புதல் விதிகளுடன் கூடிய காலவரையறைக்குட்பட்ட ஒப்புதல்கள்.
- அனுமதிகளில் உள்ள சிதறல்களைக் குறைப்பதற்காக, அதிகார வரம்புகள் முழுவதும் ஒரே சீரான கட்டமைப்பு.
- தன்னிச்சையான வரிகள் மற்றும் கட்டணங்களை ஒழித்து, வெளிப்படைத்தன்மை மற்றும் செலவு முன்கணிப்பை உறுதி செய்தல்.
- உள்ளாட்சி அமைப்புகளுடனான தகராறுகளைத் தவிர்ப்பதற்காக, இழப்பீடு மற்றும் சீரமைப்பு வழிமுறைகள் (“தோண்டி மீட்டெடுங்கள்” / “தோண்டிப் பணம் செலுத்துங்கள்”) வரையறுக்கப்பட்டுள்ளன.
- எளிதாக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் தெளிவான ஆவணத் தேவைகள் மூலம் இணக்கச் சுமை குறைக்கப்பட்டது.
- துரிதப்படுத்தப்பட்ட குழாய்வழி உள்கட்டமைப்பு மேம்பாடு
- அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் திட்ட வழித்தடங்களை அமைப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் தடையற்ற அணுகலை எளிதாக்குகிறது.
- நகர எரிவாயு விநியோக (CGD) வலையமைப்புகள் மற்றும் பிரதான குழாய்களை விரைவாக அமைப்பதை உறுதி செய்கிறது.
- இறுதிக்கட்ட இணைப்பு மற்றும் குழாய்வழி இயற்கை எரிவாயுவின் (PNG) விரைவான விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கிறது.
- செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மை மற்றும் உறுதித்தன்மை
- தடங்கல்கள் மற்றும் அணுகல் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட செயல்பாட்டுச் சிக்கல்களைக் கையாள்வதில் தெளிவை வழங்குகிறது.
- அதிகப்படியான நிதிச் சுமையை ஏற்படுத்தாமல், பொறுப்புடைமையை உறுதி செய்வதற்காக வங்கி உத்தரவாதங்கள் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது.
- நுகர்வோர் சார்ந்த சேவை வழங்கல்
- காலவரையறைக்குள் PNG இணைப்புகளை வழங்குவதை சாத்தியமாக்கி, சேவை வழங்கல் தரங்களை மேம்படுத்துகிறது.
- குழாய்வழி உள்கட்டமைப்பு உள்ள பகுதிகளில், LPG-யிலிருந்து PNG-க்கு படிப்படியாக மாறுவதற்கு இது வழிவகுக்கிறது.
- தொழில்நுட்ப ரீதியாக இணைப்பு சாத்தியமில்லாத இடங்களில் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
- பொது நலனைப் பாதுகாத்தல்
- உள்ளாட்சி அமைப்புகள் அல்லது தனியார் நிறுவனங்களால் குழாய்வழி மேம்பாட்டுப் பணிகளுக்கான அணுகல் நியாயமற்ற முறையில் மறுக்கப்படுவதைத் தடுக்கிறது.
- நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மூலம் வெளிப்படையான தகராறு தீர்வு வழிமுறையை நிறுவுகிறது.
- நுகர்வோர் வசதியை, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றம் ஆகிய தேசிய முன்னுரிமைகளுடன் சமநிலைப்படுத்துகிறது.
எதிர்பார்க்கப்படும் தாக்கம்
- மேம்படுத்தப்பட்ட எரிசக்திப் பாதுகாப்பு: எரிவாயு விநியோக வலையமைப்பை வலுப்படுத்திப் பன்முகப்படுத்துவதன் மூலம், ஒற்றை எரிபொருட்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கிறது.
- வணிகம் செய்வதில் மேம்பட்ட எளிமை: விரைவான ஒப்புதல்களும் ஒழுங்குமுறை சார்ந்த உறுதியும் முதலீட்டாளர் நம்பிக்கையை அதிகரிக்கும்.
- உள்கட்டமைப்பு விரிவாக்கம்: நகர்ப்புற மற்றும் ஓரளவு நகர்ப்புறப் பகுதிகளில் குழாய் வலையமைப்புகளை விரைவுபடுத்துதல்.
- தூய்மையான சுற்றுச்சூழல் : சமையல், போக்குவரத்து மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காக இயற்கை எரிவாயுவின் பயன்பாடு அதிகரிப்பது, காற்றின் தரத்தை மேம்படுத்தவும், மாசு வெளியேற்றத்தைக் குறைக்கவும் பங்களிக்கும்.
- பொருளாதார வளர்ச்சி: நம்பகமான மற்றும் மலிவு விலையிலான எரிசக்தி விநியோகம், தொழில்துறை மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும்.
அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு
இந்தியாவின் எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை விரிவுபடுத்துவதற்கும், முதலீடு, புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் கொள்கைச் சூழலை வளர்ப்பதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
திறமையான உள்கட்டமைப்பு, எளிதான வணிகம் மற்றும் தூய்மையான ஆற்றலுக்கான பரந்த அணுகல் ஆகியவற்றின் ஆதரவுடன், எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தைக் கட்டமைப்பதை நோக்கிய ஒரு முக்கியப் படியாக இந்த ஆணை அமைகிறது.
எம்.பிரபாகரன்
