குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று (16.10.2026) கர்நாடகாவின் கார்வாரில், கடற்படையின் முதல் உள்நாட்டு பல்நோக்குக் கப்பலான ஐஎன்எஸ் சமர்த்தக்-ஐ கடற்படையில் இணைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுத் தளவாடங்களைக் கொண்ட ஐஎன்எஸ். சமர்த்தக், இந்தியாவின் தொழில்துறை, தொழில்நுட்பம், கப்பல் கட்டும் திறன்களின் வலிமையைப் பிரதிபலிக்கிறது என்று கூறினார். பாதுகாப்பில் தற்சார்பு என்பது இப்போது சாத்தியமாகி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தை எடுத்துரைத்த திரு சி.பி. ராதாகிருஷ்ணன், சத்ரபதி சிவாஜி மகாராஜ், சோழ வம்சம் போன்றவற்றின் கடற்படை மரபுகளை நினைவு கூர்ந்தார்.
கடல்சார் நலன்களைப் பாதுகாக்க கடற்படை எப்போதும் விழிப்புடன் செயல்படுகிறது என்று அவர் பாராட்டினார்.
கார்வார் தளத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்ட திரு சி.பி. ராதாகிருஷ்ணன், ஆழமான இயற்கை துறைமுகமும் அரபிக்கடலுக்கு அருகாமையில் இருப்பதும் அதனை இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக ஆக்குகிறது என்றார். சீபேர்ட் திட்டத்தின் கீழ் நவீன கடற்படை உள்கட்டமைப்பு மேம்பாட்டை அவர் எடுத்துரைத்தார்.
இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தியை வலுப்படுத்துவதில், இந்தியக் கடற்படை, பாதுகாப்புத் துறை பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் கப்பல் கட்டும் தளங்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ, கல்வித்துறை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பை திரு சி.பி. ராதாகிருஷ்ணன் எடுத்துரைத்தார்.
கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், கடற்படை, பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
திவாஹர்
