பச்சிளம் குழந்தைகளுக்கான உணவு தயாரிப்புகளில் ஊட்டச்சத்துத் தர நிலையை வலுப்படுத்த எஃப்எஸ்எஸ்ஏஐ நடவடிக்கை.

பச்சிளம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துப் பாதுகாப்புகளை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையமான எஃப்எஸ்எஸ்ஏஐ (FSSAI), ஆறு மாதங்கள் வரையிலான பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சுக்ரோஸ், ஃபிரக்டோஸ் சேர்ப்பதைத் தடைசெய்யும் வகையில், வரைவுத் திருத்தத்தை வெளியிட்டுள்ளது.

2026 அக்டோபர் 16 அன்று அரசிதழில் வெளியிடப்பட்ட, இந்த வரைவுத் திருத்த ஒழுங்குமுறை, குழந்தைகளின் ஊட்டச்சத்துப் பொருட்கள், வயதுக்கு ஏற்ற ஊட்டச்சத்துத் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம், தற்போதுள்ள ஒழுங்குமுறைக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த முயல்கிறது.

தற்போதுள்ள விதிமுறைகள், பிறப்பு முதல் 24 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான பல்வேறு வகை குழந்தை ஊட்டச்சத்துப் பொருட்களுக்கு, விரிவான ஊட்டச்சத்துக் கலவை, தரம், பாதுகாப்புத் தரநிலைகளை விதிக்கின்றன.

புதிய விதிகளை அடிப்படையாகக் கொண்டு, ஆறு மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான தயாரிப்புகளில் சுக்ரோஸ், ஃபிரக்டோஸ் சேர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டை இந்த வரைவுத் திருத்தம் முன்மொழிகிறது. முன்மொழியப்பட்ட விதியின்படி, 6 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான தயாரிப்புகளில் சுக்ரோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் சேர்க்கப்படக்கூடாது.

வரைவு அறிவிப்பு பொதுமக்களின் கருத்துக்கேட்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. 60 நாட்களுக்குள் பெறப்படும் கருத்துகள், திருத்தத்தை இறுதி செய்வதற்கு முன்னர் பரிசீலிக்கப்படும்.

Leave a Reply