டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் தரவு பாதுகாப்பை வலுப்படுத்த, NHAI ஆல் ஊக்குவிக்கப்படும் நிறுவனமான இந்தியன் ஹைவேஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் (IHMCL), குஜராத்தின் காந்திநகரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துடன் (NFSU) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது. ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் ஆலோசனை துறைகளில், குறிப்பாக சைபர் தடயவியல், டிஜிட்டல் சான்று ஒருமைப்பாடு மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை தொடர்பான மேம்பட்ட தொழில்நுட்ப பயன்பாடுகளில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. NHAI தலைவர் ஸ்ரீ சந்தோஷ் குமார் யாதவ்; IHMCL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீ விஷால் சவுகான் மற்றும் NHAI, IHMCL மற்றும் NFSU இன் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் IHMCL இன் தலைமை இயக்க அதிகாரி ஸ்ரீ ஏ.ஆர். சித்ராஞ்சி மற்றும் காந்திநகரின் NFSU வளாக இயக்குநர் டாக்டர் எஸ்.ஓ. ஜுனாரே ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அறிவு உருவாக்கம், தொழில்நுட்ப மீள்தன்மை மற்றும் நிறுவன திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக இரு அரசு அமைப்புகளுக்கிடையில் பரஸ்பர நன்மை பயக்கும் கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த ஒத்துழைப்பை எளிதாக்குவதை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. முக்கியமான தேசிய நெடுஞ்சாலை செயல்பாடுகள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் தடயவியல் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதற்கு இந்த ஒத்துழைப்பு பங்களிக்கும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், சிசிடிவி, மல்டிமீடியா பகுப்பாய்வு, ஆடியோ-வீடியோ பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் மற்றும் சைபர் தடயவியல் ஆய்வகங்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆய்வகங்களை உருவாக்குவதற்கு NFSU IHMCL-க்கு தொழில்நுட்ப வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்கும்.
கூடுதலாக, சைபர் & டிஜிட்டல் தடயவியல், மல்டிமீடியா பகுப்பாய்வு மற்றும் தொடர்புடைய களங்களில் சிறப்பு பயிற்சி திட்டங்களை வழங்குவதன் மூலம் சைபர் மீள்தன்மை மற்றும் சான்று ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதில் பல்கலைக்கழகம் IHMCL-க்கு ஆதரவளிக்கும்.
பலவழிப் பாதை இல்லாத ஓட்டம் (MLFF), மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் (ATMS), தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (ANPR), போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் (TMS) மற்றும் எடை-இன்-மோஷன் (WIM) போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கவனம் செலுத்தும். அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பான கேமரா அடிப்படையிலான இமேஜிங் அமைப்புகள், மறைகுறியாக்கப்பட்ட தரவு சேமிப்பு மற்றும் மீட்டெடுப்பு, முக்கியமான பயன்பாடுகளின் சைபர் பாதுகாப்பு மதிப்பாய்வுகள், சான்றுகளின் ஒருமைப்பாடு மற்றும் தடயவியல் நம்பகத்தன்மை, இமேஜிங் துல்லியத்தின் அறிவியல் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு செயல்பாட்டு மையம் (SOC) சேவைகள் மற்றும் தடயவியல் சரிபார்ப்பு ஆய்வகங்களை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.
மேலும், இரு நிறுவனங்களும் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பகுதிகளில் கூட்டு ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் ஆலோசனை திட்டங்களை மேற்கொள்ளும். செயல்படுத்தலை மேற்பார்வையிடவும், அவ்வப்போது முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும் ஒவ்வொரு நிறுவனத்தாலும் ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுவார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
நாடு முழுவதும் வேகமாக விரிவடைந்து வரும் தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பாதுகாப்பான மற்றும் வலுவான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதில் NHAI-யின் கவனத்தை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது.
திவாஹர்
