NH-67 திருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகு சாலை (Service Road) அமைக்காதக் காரணத்தால் கடந்த 15 ஆண்டுகளில் இதுவரை 417 நபர்கள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். எனவே 16 ஆண்டு காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த முக்கியமான கோரிக்கையை நிறைவேற்றித்தந்திட, மத்திய நிதி பகிர்மானத்திலிருந்து ஒதுக்கீடு செய்துதர வேண்டி மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நித்தின் கட்கரிடம் திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினர் துரை வைகோ இன்று நேரில் சந்தித்து எழுத்துப்பூர்வமானக் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார்.
16 ஆண்டுகளுக்கு முன் 2009-ஆம் ஆண்டு அணுகு சாலை இல்லாமலேயே இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது என்றும், அன்றைய காலகட்டத்திலேயே விபத்துகள் ஏற்பட்ட இந்த சாலையில், இன்று பதினாறு ஆண்டுகள் கடந்து, திருச்சி மாநகரின் அபரிதமான வளர்ச்சி மற்றும் இன்றைய மக்கள் தொகை பெருக்கம், குடியிருப்பு பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அதிகரித்துள்ளதாலும், மேலும் இந்த NH-67 பகுதி என்பது தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை போன்ற முக்கிய மாவட்டங்களை இணைக்கும் முதன்மை வழித்தடமாக உள்ளதாலும், வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து இருப்பதாலும் இதுவரை இப்பகுதியில் அணுகு சாலை (Service Road) அமைக்காதக் காரணத்தால், இந்த வழித்தடத்தில் மிக மோசமான அளவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொடர் விபத்துகள் ஏற்பட்டு விலைமதிக்க முடியாத மனித உயிர்கள் அநியாயமாக பறிப்போய்கிறது.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2011 ஆம் ஆண்டு முதல் 2025 வரை இந்தப் பகுதியில் நடந்த விபத்துகளில் இதுவரை 417 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதசாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில், உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இந்த அவசரத் தேவையை உணர்ந்து, தமிழ்நாடு அரசு 29.08.2011 தேதியிட்ட G.O. (Ms) எண் 104, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மூலம், துவாக்குடி முதல் அரியமங்கலம்-பால்பண்ணை வரை மொத்தம் 14.490 கி.மீ. நீளமுள்ள சேவைப் பாதை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளதை எடுத்துரைத்து, இந்த சாலை முழுமையாக அமைக்கப்பட மத்திய அரசின் ஆதரவு முக்கியமானதாக இருந்தாலும், தமிழ்நாடு அரசும் இந்தத் திட்டத்தை முன்னுரிமையாகக் கருதி ஏற்கனவே ரூ.84.50 கோடியான தனது பங்கை ஒதுக்கியுள்ளது.
அத்துடன், பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளைத் தொடர்ந்து, அமைக்கப்பட வேண்டிய அணுகு சாலையின் அகலம் 60 மீட்டரில் இருந்து 45 மீட்டராக திருத்தப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்க உள்ளன.
இருப்பினும், நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டும் மதிப்பிடப்பட்ட செலவு ரூ.618.20 கோடியாகும். இதில், ரூ.533.70 கோடியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மூலம் மத்திய அரசிடமிருந்து பெற வேண்டியுள்ளது.
மேற்கண்டவற்றின் அடிப்படையில், அணுகு சாலை திட்டத்தை உரிய நேரத்தில் செயல்படுத்துவதற்கு தேவையான ரூ.533.70 கோடியை ஒதுக்கித் தர வேண்டுமென மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நித்தின் கட்கரிடம் திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினர் துரை வைகோ இன்று நேரில் சந்தித்து எழுத்துப்பூர்வமானக் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார்.
திருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையில் முழுமையாக அணுகு சாலை (Service Road) அமைக்கும் பணி விரைவில் முழுமை அடைந்தால் விலைமதிக்க முடியாத மனித உயிர்கள் நிச்சயமாக காப்பாற்றப்படும்.
அதேபோல் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் கல்லணைக்கு பாதுகாப்பாக செல்வதற்கு சுரங்கப்பாதை அமைப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்காணும் இரண்டு பணிகளும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தொடங்கினால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அரங்கராஜ குமாரமங்கலத்திற்கு பிறகு, திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கு ஒரு துடிப்பான, செயல்பாடு உள்ள மக்களவை உறுப்பினராக துரை வைகோ கிடைத்துள்ளார். கடந்த ஓராண்டு கால அவரது செயல்பாடு அதை உறுதி செய்துள்ளது.
வாக்களித்த தொகுதி மக்களின் நலன் கருதி மத்திய அரசிடம் இணக்கமான அணுகுமுறையை தொடர்ந்து அவர் கடைபிடித்தால் இன்னும் ஏராளமான திட்டங்களை திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியில் செயல்படுத்த முடியும்.
நாம் கற்ற கல்வியும்; பெற்ற அனுபவமும் மற்றவர்களுக்காகவும், மக்களுக்காகவும் பயன்பட வேண்டும். அதை துரை வைகோ தொடர்ந்து செய்வார் என்ற நம்பிக்கை நமக்கும் இருக்கிறது.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040. editorutlmedia@gmail.com
.
