சவுக்கு சங்கருக்கு கண்ணீர் அஞ்சலி! முகநூலில் பாமக தொண்டர் விஷமத்தனம்.

சமூக ஊடகவியலாளரும், சவுக்கு ஊடக நிறுவனத்தின் ஆசிரியரும், பிரபல அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரின் புகைப்படத்தை வெளியிட்டு; சவுக்கு சங்கர் மரணம் அடைந்து விட்டதாக தருமபுரி மாவட்ட பாமக என்ற முகநூல் பக்கத்தில் ஆட்டோ செந்தில் என்கிற பெயரில் “கண்ணீர் அஞ்சலி” போஸ்டர் பதிவுச் செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் மருத்துவர் அன்புமணி ஆகியோருக்கிடையேக் கடுமையான விமர்சனங்களும், மோதல் போக்கும் நிலவி வருகிறது. இதனால் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களும், முக்கிய நிர்வாகிகளும் என்ன செய்வது? யாரை ஆதரிப்பது? என்று தெரியாமல் விழி பிதுங்கி திரிகின்றனர்.

இரு மனங்களுக்கும், நான்கு சுவர்களுக்கு இடையே இருக்க வேண்டிய பேசி தீர்க்க வேண்டிய இரகசியங்களை எல்லாம் மருத்துவர் ராமதாஸ் பொதுவெளியில் பகிரங்கமாக தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் இந்த அதிகார யுத்தத்தை பயன்படுத்திக் கொண்டு சில அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும் எரிகிற நெருப்பில் நெய்யை ஊற்றுவதைப் போல செயல்பட்டு வருகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சியில் நடக்கும் இந்த அதிகாரப்போட்டி உட்கட்சி பிரச்சனைதான் என்றாலும்; மருத்துவர் ராமதாஸின் தொடர்ச்சியானப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நாட்டில் நடக்கும் மற்ற முக்கியப் பிரச்சனைகளை மழுங்கடித்து வருகிறது.

“நீர் அடித்து நீர் விலகாது” அப்பன் மகன் உறவு என்றும் விட்டுப் போகாது! இந்த அடிப்படை உண்மை கூட தெரியாமல் சில அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும் மற்றும் பாமக தொண்டர்களும் உணர்ச்சிப் பெருக்கில் சில விரும்பத் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சி தான் இந்த சவுக்கு சங்கர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.

சவுக்கு சங்கரின் விமர்சனங்களில்; அவரது நடவடிக்கைகளில் மற்றும் அவரது செயல்பாடுகளில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருந்தாலும் அல்லது வணிக நோக்கம் இருந்தாலும் அதை நாகரீகத்தோடு தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர; இப்படி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்டு வன்மத்தை வெளிக்காட்டுவது ஏற்கத்தக்கதல்ல. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மருத்துவர் அன்புமணி ஆதரவாளர் போர்வையில் இந்த முகநூல் பதிவு அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற விஷமத்தனங்களை மருத்துவர் அன்புமணி ஒருபோதும் விரும்ப மாட்டார். இதுப் போன்ற நாகரிகமற்ற நடவடிக்கைகளை மருத்துவர் அன்புமணி முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

Leave a Reply