புதுதில்லியில் இன்று (2025 ஜூன் 12) கடலோரப் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் (OSCC-ஓஎஸ்சிசி) 137-வது கூட்டம் கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் (ICG) தலைமையில் நடைபெற்றது. இந்தியாவின் கடலோரப் பாதுகாப்பின் தயார்நிலையையும் செயல்திறனையும் ஆய்வு செய்து அது தொடர்பான வழிமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கூட்டம் நடைபெற்றது. வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்வதற்கும் கடலோர சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நிறுவனங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
குழுவில் உரையாற்றிய கடலோர காவல் படை தலைமை இயக்குநர் திரு பரமேஷ் சிவமணி, எரிசக்தி பாதுகாப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார். மேலும் இந்தத் துறையில் நாட்டின் வளர்ச்சி மற்றும் தன்னிறைவுக்கு கடலோர சொத்துக்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் கடற்படை, விமானப்படை, உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், பெட்ரோலியம் – இயற்கை எரிவாயு அமைச்சகம், ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், புலனாய்வுப் பிரிவு, கப்பல் போக்குவரத்து இயக்குநரகம், ஓஎன்ஜிசி மற்றும் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாநில காவல்துறை பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கடல்சார் பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்பட மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக 1978-ம் ஆண்டு ஓஎஸ்சிசி உருவாக்கப்பட்டது.
எம்.பிரபாகரன்
