தேசிய சராசரியைவிட தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் சிறப்பாக உள்ளதாக மாநில திட்டக் குழு மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்திய கற்றல் அடைவு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக அவ்வப்போது ‘ஸ்லாஸ்’ எனும் மாநில கற்றல் அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு மாணவர்களின் கற்றல் விளைவுகளை அறிந்து மேம்படுத்தவும், பாடத்திட்டம், கற்பித்தல் மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இதற்கிடையே மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் சில தனியார் அமைப்புகள் நடத்திய ஆய்வில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் நிலை சற்று பின்தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதை முன்வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவியும் கருத்து தெரிவித்ததால் இந்த விவகாரம் சர்ச்சையானது. இதையடுத்து பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை முழுமையாக ஆராய்வதற்காக பிரத்யேக ஆய்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக ஏற்கெனவே நடத்திவரும் ‘ஸ்லாஸ்’ தேர்வை மாநிலத் திட்டக்குழுவுடன் இணைந்து விரிவாக மாநிலம் முழுவதும் உள்ள 45,924 அரசு, அரசு உதவி பள்ளிகளிலும் நடத்த முடிவானது.
எஸ்.திவ்யா
