சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான மோசடிகளைத் தடுக்கும் நடவடிக்கையாக தில்லி தெற்கு பகுதியைச் சேர்ந்த, சிஜிஎஸ்டி ஆணையரகம், ரூ. 7.85 கோடி மதிப்பிலான சட்டத்திற்குப் புறம்பான உள்ளீட்டு வரி வரவு வாயிலாக பெரிய அளவிலான வரி ஏய்ப்பு நடவடிக்கையை கண்டுபிடித்துள்ளது. தெற்கு தில்லியைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் மூலம் 7.85 கோடி ரூபாய் அளவிற்கு (தோராயமாக) உள்ளீட்டு வரி வரவு மூலம் ஜிஎஸ்டி வரியைக் குறைவாக செலுத்தியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளில், பாலம்/துவாரகா பகுதியில், பட்டயக் கணக்காளரின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களுடன் இணைக்கப்பட்ட 80 – க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி பதிவு எண்கள் (சரக்கு மற்றும் சேவை வரி அடையாள எண்கள்) தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சரக்குகள் அல்லது சேவைகளின் உண்மையான விநியோகம் எதுவுமின்றி, சுழற்சி அடிப்படையிலான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 31 ஜிஎஸ்டி பதிவு எண்களின் முக்கிய குழுவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
12 வளாகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் வாயிலாக, மேலும் பல்வேறு நிறுவனங்கள் சரக்கு மற்றும் சேவை தொடர்பான நடவடிக்கைகள் எதுவுமின்றி இத்தகைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கைகளின் போது, விசாரணையுடன் தொடர்புடைய பல்வேறு மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. வரி செலுத்தும் பல்வேறு தரப்பினரிடம் ஜிஎஸ்டி படிவம் / அறிக்கை தாக்கல் செய்வதற்கு பட்டயக் கணக்காளரை முழுமையாக நம்பியிருப்பதாக ஒப்புக்கொண்டனர். அறிக்கை தாக்கல் செய்வதற்கு ஜிஎஸ்டி இணையதளத்தில் உள்நுழைவதற்கான சான்றுகள், அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறைகள் என அனைத்தும் அந்த பட்டையாக கணக்காளரால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் செய்த குற்றங்கள் சிஜிஎஸ்டி சட்டம், 2017 – ன் பிரிவுகள் 132(1)(b) மற்றும் 132(1)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது பிரிவு 132(5) – ன் கீழ் கைது செய்வதற்கும், பிணையில் வெளிவர முடியாத குற்றமாகும். மேலும் இச்சட்டத்தின் பிரிவு 132(1) (i) – ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். அதன்படி, மேற்படி பட்டயக் கணக்காளர் சிஜிஎஸ்டி சட்டம், 2017 – ன் பிரிவு 69(1) – ன் கீழ் கைது செய்யப்பட்டு, 07.06.2025 அன்று பணியில் உள்ள நடுவர் நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை 21.05.2025 வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கு, ஆள்மாறாட்டம், நற்சான்றிதழ் தவறாகப் பயன்படுத்துதல், கூட்டு சுழற்சி அடிப்படையிலான வர்த்தகம் மூலம் ஜிஎஸ்டி கட்டமைப்பின் முறையற்ற செயல்களை எடுத்துக்காட்டுகிறது. முழு அளவிலான மோசடி நடவடிக்கைகளை வெளிக் கொண்டுவரும் வகையில், தகுதியற்ற உள்ளீட்டு வரி வரவுகள் தொடர்பான அனைத்து பயனாளிகளையும் அடையாளம் காணவும் சிஜிஎஸ்டி சட்டம், 2017 – ன் கீழ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
எம்.பிரபாகரன்
