மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது!- ஜி.கே.வாசன் அறிக்கை.

               மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு உரிய பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

             தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படுவதும், அவ்வப்போது இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதும் நீடிக்கிறது. 

                இதனால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.

              நேற்று மதியம் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து சென்ற 4 மீனவர்கள் இரவு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் மீனவர்கள் மத்தியில் மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

                வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தி, மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்து, மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி அட்டூழியம் செய்திருக்கிறார்கள் கடற்கொள்ளையர்கள்.

தாக்கப்பட்டுள்ள மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

             தமிழக அரசு அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து குணமடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

             மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்களின் அத்துமீறிய செயல் இனியும் தொடரக்கூடாது என்பதற்காக மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

            தமிழக மீனவர்கள் அச்சத்துடன் கடலுக்குச் செல்லும் நிலை மாற வியூகம் வகுத்து அதை செயல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.

மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பு இருப்பதை இந்திய கடலோர காவல்படை தொடர் கண்காணிப்பின் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

               மத்திய மாநில அரசுகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, இலங்கை கடற்கொள்ளையர்களின் அராஜகம் நீடிக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply