ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு!முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்பட 13 நபர்கள் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு! -இதோ முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு மற்றும் லஞ்சம் பெறப்பட்டதாக திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு உள்ளிட்ட 13 பேர் மற்றும் அடையாளம் தெரியாத அதிகாரிகள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்கு (FIR No. 07/2026) பதிவு செய்துள்ளது.

26 பக்கங்களைக் கொண்ட முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவுச் செய்துள்ளோம்.

07-2026-SIC

2021 முதல் 2025 வரை நடைபெற்ற அரசு டெண்டர்கள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. ஒப்பந்த மதிப்பில் 7.5% முதல் 10% வரை “கட்சி நிதி” (Party Fund) என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அமலாக்கத்துறை (ED) வழங்கிய 258 பக்க அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக கைப்பேசி, வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் படங்கள் சிக்கி உள்ளன.

டெண்டர் திறப்பதற்கு முன்பே காண்ட்ராக்டர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக 05.09.2026 சனிக்கிழமை கே.என். நேருவின் திருச்சி இல்லம் மற்றும் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிரச் சோதனைகளை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்த வழக்குச் சம்பந்தமான விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்பட இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பும் நடவடிக்கையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றோடு (செப்டம்பர் 8) முடிவடைந்து விட்டதாலும், செப்டம்பர் 12, 13 ,14 ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை என்பதாலும், இந்த வழக்கு விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் கே. என். நேரு மீண்டும் நீதிமன்றத்தின் உதவியை நாடி உள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் செந்தில் பாலாஜி வகையறாக்கள் தலைமறைவாகி தப்பிச் சென்று நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றதை போல, இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை அலட்சியமாக விட்டு விடக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும், உளவுத்துறையும் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையும் மிக கவனமாகச் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) ஒரு வழக்கைப் பதிவு செய்தால், அந்த வழக்கின் சட்டப்பூர்வ அதிகாரப்பூர்வ புலனாய்வு அமைப்பான தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரே சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் அழைத்து அல்லது நேரில் சென்று விசாரிக்க வேண்டும்.

மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறை (ED) நேரடியாக மாநில அரசுக்கு உத்தரவிட முடியாது. இருப்பினும், அது சேகரித்த ஆதாரங்கள் மற்றும் தகவல்களை (Information/Dossier) மாநில காவல்துறையின் தலைமை இயக்குநருக்கோ (DGP) அல்லது நீதிமன்ற உத்தரவின் பேரிலோ தமிழ்நாடு அரசுக்கு அனுப்பலாம்.

1. வழக்கு விசாரணை அதிகாரம் (Jurisdiction)

  • தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC): லஞ்ச ஒழிப்புத்துறையின் கையேடு (Vigilance Manual) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Corruption Act) படி, வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் அதன் விசாரணை அதிகாரி (Investigating Officer – IO) மட்டுமே குற்றம் சாட்டப்பட்ட நபர்களைச் சம்மன் அனுப்பி அழைக்கவும், விசாரிக்கவும் தகுதி பெற்றவர் ஆவார்.
  • அமலாக்கத்துறையின் பங்கு: அமலாக்கத்துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்திருந்தாலும், வழக்கை விசாரிக்கும் முழுப் பொறுப்பும், நபர்களைக் கைது செய்யும் அதிகாரமும் DVAC அமைப்பிடமே இருக்கும். அமலாக்கத்துறை இதில் நேரடியாகப் புகுந்து நபர்களை விசாரிக்க முடியாது.
  • அந்த வகையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு விவகாரம், நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) சேகரித்த ஆதாரங்களை தமிழக டி.ஜி.பி-யிடம் வழங்கியது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசு இந்தத் தகவல்களை DVAC-க்கு அனுப்பியது. தற்போது இந்த வழக்கைப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களின் இடங்களில் சோதனையிட்டு விசாரிப்பது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைதான்.

ஒருவேளை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் முறையான விசாரணை நடக்கவில்லை என்றோ அல்லது அரசியல் தலையீடு இருக்கிறது என்றோ சம்பந்தப்பட்ட நபர்களோ அல்லது அமலாக்கத்துறையோ நீதிமன்றத்தை அணுகினால்:

  • நீதிமன்ற உத்தரவு: உச்ச நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ உத்தரவிட்டால் மட்டுமே அந்த வழக்கு சி.பி.ஐ (CBI) போன்ற பிற சுதந்திரமான மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு மாற்றப்படலாம். அவ்வாறு மாற்றப்பட்டால் மட்டுமே மத்திய அமைப்புகள் அந்த நபர்களை விசாரிக்க முடியும்.

Leave a Reply