மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, இந்திய வில்வித்தை சங்கத்தின்‘உலக பாரா வில்வித்தை தொடர்’ போட்டிகளை இன்று காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். 2026 செப்டம்பர் 5 முதல் 9 வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில், பூட்டான், இங்கிலாந்து, சீனா, வங்கதேசம், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, அமெரிக்கா உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
துவக்க விழாவில் பேசிய திரு அமித் ஷா, அனைத்து விளையாட்டுகளுக்கான பயிற்சி மற்றும் விளையாட்டு வசதிகள், உபகரணங்களின் உற்பத்தி ஆகியவற்றில் இந்தியா ஒரு முக்கிய மையமாக உருவெடுக்கும் என்று கூறினார். இந்த விரிவான தொலைநோக்குப் பார்வையுடன், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவை உலகின் மிகப்பெரிய விளையாட்டு மையமாக மாற்றுவதை நோக்கி மத்திய அரசு முனைப்புடன் பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்வது மட்டுமே குறிக்கோள் அல்ல என்றும், ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், காவல் துறை விளையாட்டுப் போட்டிகள் முதலியவற்றில் இடம்பெற்றுள்ள அனைத்து விளையாட்டுப் பிரிவுகளையும் வலுப்படுத்துவதே தங்கள் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இங்குள்ள அதிநவீன பயிற்சி வசதிகள் சர்வதேசத் தரநிலைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இவை, இந்திய விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு முக்கியப் பயிற்சி மையமாகத் திகழும். வரும் காலங்களில், விளையாட்டு தொடர்பான காயங்களுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்புத் துறையிலும் இந்தியாவும் குஜராத்தும் உலகளாவிய முக்கிய மையங்களாக உருவெடுக்கும் என்றும் அவர் கூறினார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நூற்றாண்டு விழா 2030-ம் ஆண்டு அகமதாபாத் நகரத்தில் நடைபெறவிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கும் தனது ஏல விண்ணப்பத்தை அகமதாபாத் சமர்ப்பித்துள்ளது என்றும், இந்தப் போட்டிகள் அகமதாபாத்திலேயே நடைபெறும் என்றும் திரு அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
திவாஹர்
