மின்னணு விசா பெற்ற வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் வர மேலும் 11 சர்வதேச நுழைவுவாயில்கள்: மத்திய அரசு அறிவிப்பு.

மின்னணு விசா வைத்துள்ள வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தருவதற்காக மேலும் 11 சர்வதேச நுழைவுவாயில்களை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிதாகச் சேர்க்கப்பட்ட 11 நுழைவுவாயில்களில் 9 நில எல்லைச் சோதனைச் சாவடிகளும் திருப்பதி, போபால் ஆகிய 2 விமான நிலையங்களும் அடங்கும். இந்த புதிய அறிவிப்பின் மூலம் மின்னணு விசா வசதியின் பயன்பாடு மேலும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் விண்ணப்பிக்கப்படும் மின்னணு விசா விண்ணப்பங்களில் தோராயமாக 95 சதவீத விண்ணப்பங்களுக்கு 72 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்கப்படுகிறது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் படி, உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் தலைமையில், வெளிநாட்டுப் பயணிகளின் வருகையை முறைப்படுத்தி, எளிதாக்கும் நோக்கிலும், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை பலப்படுத்தும் தொழில்முறை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கிலும், கடந்த சில ஆண்டுகளாக விசா நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய அறிவிப்பின் மூலம் மின்னணு விசா பெற்ற வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் வர அனுமதிக்கும் மொத்த சர்வதேச நுழைவுவாயில்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உட்பட 37 விமான நிலையங்களும், சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகம், தூத்துக்குடி உள்ளிட்ட 38 துறைமுகங்களும், 13 நில எல்லைச் சோதனைச் சாவடிகளும் அடங்கும்.

இந்திய விசா நடைமுறையை தாராளமயமாக்கும் நோக்கில் 2014-ம் ஆண்டு 43 நாடுகளுக்குத் தொடங்கப்பட்ட இந்த மின்னணு விசா சேவை, தற்போது 172 நாடுகளின் குடிமக்களுக்குக் கிடைக்கிறது. சுற்றுலா, மருத்துவம், வணிகம் உள்ளிட்ட 17 உட்பிரிவுகளின் கீழ் இந்த விசா வழங்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் வழங்கப்படும் மொத்த விசாக்களில் தோராயமாக 78 சதவீதம் மின்னணு விசாக்களாகவே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply