குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன், 1942ஆம் ஆண்டு நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை நினைவுகூரும் ஆகஸ்ட் புரட்சி நாளையொட்டி, இன்று அந்தமான் நிக்கோபாரின் ஸ்ரீ விஜயபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றி, ‘ஹர் கர் திரங்கா’ எனப்படும் ‘இல்லம் தோறும் மூவண்ணக் கொடி’ இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீ விஜயபுரத்தில் உள்ள டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அரசு தொழில்நுட்ப நிறுவனம் (DBRAIT) அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்துடனும், மூவண்ணக் கொடியின் வரலாற்றுடனும் நெருங்கிய தொடர்புடைய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீவுகளைவிட, ‘இல்லந்தோறும் மூவண்ணக் கொடி’ இயக்கத்தைத் தொடங்குவதற்கு பொருத்தமான இடம் வேறு எதுவும் இருக்க முடியாது என்றார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ‘தாயின் மணக்கொடி பாரீர்’ பாடல் வரிகளை நினைவுகூர்ந்த திரு. சி. பி. ராதாகிருஷ்ணன், ‘இல்லந்தோறும் மூவண்ணக் கொடி’ இயக்கம், ஒவ்வொரு குடிமகனையும் ஒரே தேசியக் கொடியின் கீழ், ஒரே பொது இலக்குடன் ஒன்றிணைத்து, தேசிய உணர்வை வலுப்படுத்துகிறது என்று கூறினார்.
‘காலா பானி’ என அழைக்கப்பட்ட கடும் சிறைத் தண்டனையை அனுபவித்த விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்த குடியரசு துணைத் தலைவர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் பாரதத்தின் புவியியல் பரப்பின் ஒரு பகுதி மட்டுமல்ல; அவை தியாகத்தின் புனித பூமி என்றும் குறிப்பிட்டார். செல்லுலார் சிறையில் துன்பங்களை அனுபவித்த வீர சாவர்க்கர் உள்ளிட்ட எண்ணற்ற தேசபக்தர்களுக்கு அவர் இதயப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்தினார். அவர்களின் துணிச்சல், தேசப்பற்று மற்றும் தியாகம், தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக அவர் கூறினார்.
1942 ஆகஸ்ட் 8ஆம் தேதி மகாத்மா காந்தி விடுத்த “செய் அல்லது செத்துமடி” என்ற அறைகூவல், கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வைத் தட்டி எழுப்பி, விடுதலைப் போராட்டத்திற்கு தீர்க்கமான உத்வேகத்தை அளித்ததாக குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார். மேலும், மூவர்ணக் கொடியின் வரலாற்றில் இந்தத் தீவுகளுக்கு உள்ள தனித்துவமான இடத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். 1943 டிசம்பர் 30ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றியதை நினைவுகூர்ந்த அவர், அது இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் என்றார்.
‘இல்லந்தோறும் மூவண்ணக் கொடி’ இயக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குடியரசு துணைத் தலைவர், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், இன்று நாடு முழுவதும் மக்களின் பேரியக்கமாக உருவெடுத்துள்ளது என்றார். ஒவ்வொரு குடிமகனும் மூவண்ணக் கொடியை பெருமையுடன் ஏற்றி, அது பிரதிபலிக்கும் தேசப்பற்று, ஒற்றுமை மற்றும் கூட்டுப் பொறுப்பு ஆகிய விழுமியங்களை தங்களது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். “பாரதம் ஒன்றே; என்றும் ஒன்றாகவே இருக்கும்” என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ மற்றும் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்பதற்கு அந்தமான் நிக்கோபார் தீவுகள் வாழும் உதாரணமாகத் திகழ்கின்றன என்று குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார். தீவுகளின் வளமான பழங்குடியினப் பாரம்பரியத்தைப் பாராட்டிய அவர், கிரேட் நிக்கோபார் தீவு மேம்பாட்டுத் திட்டம், இந்தியாவின் கடல்சார் மேம்பாடு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார். அதேவேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு வளர்ச்சி முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்தியா எப்போதும் தாராள மனப்பான்மை கொண்ட நாடாக இருந்து வருகிறது. ஆனால், நமது தாராள மனப்பான்மையை ஒருபோதும் பலவீனமாகக் கருதக்கூடாது. நமது தேசிய நலன்களையும் இறையாண்மையையும் பாதுகாக்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாக வாழ்வை போற்றி, வலிமையான மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில், குடியரசு துணைத் தலைவர் கலாசார நடன நிகழ்ச்சிகளை கண்டுகளித்ததுடன், ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்தின் உணர்வையும், தேசிய ஒற்றுமை மற்றும் தேசப்பற்றினை எடுத்துரைக்கும் கண்காட்சியையும் பார்வையிட்டார்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் (ஓய்வு) டி. கே. ஜோஷி, தலைமைச் செயலாளர் திருமதி சஞ்சல் யாதவ், ஸ்ரீ விஜயபுரம் நகர் மன்றத் தலைவர் திருமதி எம். வசந்த உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள், மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திவாஹர்
