தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு – தமிழக மீனவர்களின் பாதுகாப்பான மீன்பிடித்தொழிலுக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும்.
நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சென்றது கண்டிக்கத்தக்கது.
2 விசைப்படகில் சென்ற 11 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அத்துமீறி கைது செய்து, அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து சென்றனர்.
குறிப்பாக விசைப்படகு இயந்திரக்கோளாரால் நின்ற போது இலங்கை கடற்படையினர் இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டது மனிதாபிமானமற்றது.
இதனால் ராமநாதபுரம் மாவட்ட மீனவக்குடும்பங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது நீடிப்பதால் மீனவர்களின் மீனிடித்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு மீனவர்களால் பொருளாதாரம் ஈட்டமுடியாமல், வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை தொடர்வதால் தமிழக மீனவக் குடும்பங்கள் அச்சத்துடனே வாழ்கிறார்கள்.
மீனவர்களின் குடும்பங்கள் பொருளாதாரமின்றி மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள்.
தமிழக மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் பாதுகாப்பாக ஈடுபட மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர்.
எனவே மத்திய அரசு தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலுக்கு இலங்கை கடற்படையினரால் இனிமேல் எவ்வித பாதிப்பும் இருக்கக்கூடாது என்பதற்காக உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்,
மேலும் மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் பேசி கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களையும், 2 விசைப்படையும் மீட்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
