வடகிழக்கு எல்லைப் பகுதியில் டிஆர்ஐ நடத்திய சோதனைகளில் 15 கிலோ மெத்தம்பெட்டமைன், 11 மெட்ரிக் டன் வெளிநாட்டு வகை கசகசா விதைகள் மற்றும் 10 மெட்ரிக் டன் பாக்குகள் பறிமுதல்.

வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் எல்லை தாண்டிய கடத்தல் சம்பவங்களுக்கு எதிரான தனது தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) மிசோரம் மற்றும் அசாமில் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டது. இதன் விளைவாக, 15 கிலோ மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள், சுமார் 11 மெட்ரிக் டன் வெளிநாட்டு வகை கசகசா விதைகள் மற்றும் 10 மெட்ரிக் டன் கடத்தப்பட்ட வெளிநாட்டு பாக்கு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

நேற்று, புலனாய்வுத் துறையின் தலைமையில் நடத்தப்பட்ட ஒரு பெரிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில், சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு ஆம்புலன்ஸை சோதனையிட்டதில், 15 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற மனோவியல் மாத்திரைகள் அடங்கிய பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. மியான்மரில் இருந்து மிசோரம் மாநிலத்திற்கு கடத்தப்பட்ட இந்த போதைப்பொருள், பின்னர் அசாமிற்கு கொண்டு செல்லப்படவிருந்தது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநரரும், இரண்டு கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 5, 6-ஆம் தேதி இரவில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நடவடிக்கையில், அசாம் ரைஃபிள்ஸ் படையினரின் உதவியுடன் டிஆர்ஐ அதிகாரிகள் அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பதார்பூரில் ஒரு கிடங்கில் சோதனைகளை நடத்தினர். இந்த நடவடிக்கையின்போது, வணிக ரீதியான தேயிலை மூட்டைகளுக்கான குறியீடுகள் கொண்ட பைகள், அட்டைப் பெட்டிகள் மற்றும் கிடங்கு முழுவதும் சிதறிக் கிடந்த சரக்குகள் ஆகியவற்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 11 மெட்ரிக் டன் எடையுள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு கசகசா (poppy seeds) பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியா-மியான்மர் எல்லை வழியாக இவை இந்தியாவிற்குள் கடத்தி வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, 05.08.2026 அன்று, ரங்கியா ரயில் நிலையத்தில் டிஆர்ஐ அதிகாரிகள் ரயில் எண் 22411-ல் வந்த சரக்குத் தொகுப்பு ஒன்றை சோதனையிட்டனர். அப்போது, அந்த ரயிலின் பார்சல் பெட்டியிலிருந்து, வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 10 மெட்ரிக் டன் எடையுள்ள பாக்குகள் அடங்கிய 120 மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. மியான்மரிலிருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக இந்தப் பாக்குகள் கடத்தி வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Leave a Reply