புற்றுநோய், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் பிற வாழ்க்கை முறை நோய்களுக்கு எதிராக நாடு தழுவிய மக்கள் இயக்கத்திற்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு); பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர் நலன், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்துள்ளார். அதிகரித்து வரும் புற்றுநோய், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் பிற தொற்றா நோய்களின் சுமைக்கு இந்தியாவின் பதில் நடவடிக்கை என்பது மருத்துவமனைகளைத் தாண்டி, நோயை முன்கூட்டியே கண்டறிதல், சரியான மருத்துவ ஆலோசனை, ஆதார அடிப்படையிலான சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட மாபெரும் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
புற்றுநோயிலிருந்து மீண்டவரும், புகழ்பெற்ற விஞ்ஞானியும், அறிவியல், தொழில்நுட்பத் துறையின் முன்னாள் மூத்த ஆலோசகருமான டாக்டர் அகிலேஷ் குப்தா எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். புற்றுநோயை வென்ற பின் டாக்டர் குப்தாவின் குறிப்பிடத்தக்க மீள்திறன் பயணத்தைக் கொண்டாடுவதற்காக, புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்கள், கல்வி மற்றும் அறிவியல் துறையினர், மூத்த அரசு அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிவியல் சமூக உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்தியாவில் வேகமாக மாறிவரும் நோய்ப் போக்கைக் குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங் தொற்றா நோய்கள் நாட்டின் மிகப்பெரிய பொது சுகாதார சவால்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாக கூறினார். புற்றுநோய், நீரிழிவு, உடல் பருமன், கல்லீரல் கொழுப்பு நோய் மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் அனைத்துப் பகுதிகளிலும் அதிகரித்து வருவதுடன், இளம் வயதினரையும் அதிகளவில் பாதிக்கின்றன. பல புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், அவற்றைத் தற்போது குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியும். எனவே சரியான நேரத்தில் பரிசோதனை செய்வதும், உடனடி மருத்துவத் தலையீடும், இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கும் சிகிச்சை முடிவுகளை மேம்படுத்துவதற்கும் மிகவும் பயனுள்ள கருவிகளாகும் என்று அவர் கூறினார்.
தற்போது சுகாதாரத் தகவல்களை அதிக அளவு பரப்புவது மட்டுமின்றி, ஊட்டச்சத்து, உணவுமுறை, நோய் மேலாண்மை தொடர்பான தவறான தகவல்களின் அபாயகரமான பரவலையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் எச்சரித்தார். சரிபார்க்கப்படாத ஆலோசனைகளும் போலி அறிவியல் கூற்றுகளும் முறையான சிகிச்சையைத் தாமதப்படுத்துவதோடு, தகுதியான சுகாதார நிபுணர்களை உரிய நேரத்தில் அணுகுவதிலிருந்தும் நோயாளிகளைத் தடுக்கின்றன என்று அவர் கூறினார். தங்கள் உடல்நலம் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது, ஆதார அடிப்படையிலான மருத்துவ ஆலோசனைகளைச் சார்ந்திருக்கும் வகையில், அதிக அறிவியல் விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.
எஸ்.சதிஸ் சர்மா
