இந்தியக் கடற்படை, 2026 மார்ச் 27 அன்று கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை கட்டளையகத்தின் கடல்சார் போர் மையத்தில், IONS கடல்சார் பயிற்சி (IMEX) TTX 2026-ஐ நடத்தியது . இந்த உயர்மட்டக் கூட்டத்தில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) உருவாகி வரும் மரபுசாரா கடல்சார் பாதுகாப்பு சவால்கள் குறித்து விவாதிப்பதற்காக, இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கின் (IONS) உறுப்புக் கடற்படைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரதிநிதிகள், IOS SAGAR-இன் சர்வதேச அதிகாரிகள் மற்றும் இந்தியக் கடற்படை அதிகாரிகள் ஒன்றிணைந்தனர்.
இந்தப் பயிற்சியில் வங்கதேசம், பிரான்ஸ், இந்தோனேசியா, கென்யா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், மியான்மர், செஷல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய நாடுகள் பங்கேற்றன . இந்தப் பன்முகப்பட்ட பன்னாட்டுப் பிரதிநிதித்துவம், பிராந்தியம் முழுவதும் பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதற்கும், கூட்டு கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் உள்ள ஒரு பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பதினாறு வருட இடைவெளிக்குப் பிறகு, 2026-2028 காலகட்டத்திற்கான IONS தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலையில், IMEX TTX 2026 பிராந்திய கடல்சார் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது.
ஒரு மேம்பட்ட உருவகப்படுத்தப்பட்ட சூழலில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சி, உலகளாவிய வர்த்தகம், எரிசக்திப் பரிமாற்றம் மற்றும் இணைப்பு ஆகியவற்றிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமான இந்தியப் பெருங்கடல் பகுதியில் (IOR) உள்ள சிக்கலான கடல்சார் பாதுகாப்புச் சவால்களைக் கையாண்டது. பங்கேற்கும் கடற்படைகளிடையே செயல்பாட்டு அணுகுமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த பகிரப்பட்ட புரிதலை மேம்படுத்துதல், தகவல் பகிர்வு மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகள் போன்ற ஒருங்கிணைப்பு வழிமுறைகளை ஆராய்தல், மற்றும் நடைமுறைப் பயன்பாட்டின் மூலம் கடல்சார் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைச் சரிபார்ப்பது உட்பட, IONS கட்டமைப்புகளின் தொடர்ச்சியான செம்மைப்படுத்தலுக்கு ஆதரவளித்தல் ஆகியவை இதன் முதன்மை நோக்கங்களாக இருந்தன.
நேரடி களப்பணிகளின் கட்டுப்பாடுகள் இன்றி, பல்வேறு சூழ்நிலைகளைக் கொண்ட எதிர்பாராத நிகழ்வுகளை உருவகப்படுத்துவதன் மூலம், இந்தப் பயிற்சியானது பங்கேற்பாளர்களுக்குத் தொழில்முறைப் பரிமாற்றத்திற்கான புதிய வழிகளை ஆராயவும், பரஸ்பர நம்பிக்கையை ஆழப்படுத்தவும் வழிவகுத்தது. ஆக்கப்பூர்வமான உரையாடல், கூட்டுப் பொறுப்பு மற்றும் கடல்சார் சவால்களுக்குப் பிராந்திய ரீதியாக முன்னெடுக்கப்படும் தீர்வுகள் ஆகியவற்றின் மூலம் ஒத்துழைப்பிற்கான ஒரு முக்கியத் தளமாக IONS-இன் பங்கை IMEX TTX 26 மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்தப் பயிற்சியின் மூலம் பெறப்பட்ட புரிதல்கள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு சீரான, பதிலளிக்கக்கூடிய மற்றும் நிலையான கடல்சார் களத்தை உறுதிசெய்து, IONS கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திவாஹர்
