இந்திய ரயில்வே, விளம்பரம் மற்றும் பிராண்டிங் முயற்சிகள் மூலம் பயணக் கட்டணம் அல்லாத வருவாயை ஈட்டுவதற்காக, விரிவான பயணக் கட்டணம் அல்லாத வருவாய் (NFR) கொள்கைகளை வகுத்துள்ளது. வெளி இட விளம்பர (OOH) கொள்கையின் கீழ், ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளம்பரம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ரயில் காட்சி வலையமைப்பு (RDN) கொள்கையானது, ரயில் நிலையங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள திரைகள் மற்றும் காட்சி அமைப்புகள் மூலம் டிஜிட்டல் விளம்பரங்களைச் சாத்தியமாக்குகிறது. மேலும், தற்போதுள்ள வழிகாட்டுதல்களின் கீழ், ரயில்கள் மற்றும் பெட்டிகள் (உள்ளேயும் வெளியேயும்) போன்ற நகரும் சொத்துக்கள் பிராண்டிங் மற்றும் விளம்பரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
விளம்பரங்கள் மூலம் ஈட்டப்படும் வருவாய், இதர வருவாயின் ஒரு பகுதியாகும். பிரிவு வாரியான வருவாய் விவரங்கள் இந்திய ரயில்வேயின் ஆண்டுப் புள்ளிவிவர அறிக்கையில் கிடைக்கின்றன.
அனைத்து விளம்பர ஒப்பந்தங்களும் இந்திய ரயில்வேயின் மின்-கொள்முதல் அமைப்பு (IREPS) இணையதளத்தில் மின்-ஏலம் மூலம் வழங்கப்படுகின்றன. வர்த்தக வருமானம் மற்றும் பயணக் கட்டணமில்லா வருவாய் மீதான கொள்கை மற்றும் விளம்பரதாரர்களுக்கான தகுதி அளவுகோல்களை கோடிட்டுக் காட்டும் அது தொடர்பான ஒப்பந்தத்தின் சிறப்பு நிபந்தனைகளின்படி ஏலதாரர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
தொடர்வண்டிகளில் காட்சிப்படுத்தப்படும் விளம்பரங்களுக்கு, ஒவ்வொரு விளம்பரத் திட்டத்திற்கும் முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும். மேலும், அதனை சம்பந்தப்பட்ட தொடர்வண்டி கோட்டத்தின் கோட்ட அதிகாரசபை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், விளம்பரத்தைக் காட்சிப்படுத்துவதற்கான பிராண்டைத் தேர்ந்தெடுப்பது விளம்பர நிறுவனத்தின் தனிப்பட்ட உரிமையாகும். விளம்பரங்களைக் காட்சிப்படுத்துவதற்கு, விளம்பர நிறுவனம் மத்திய/மாநில சட்டங்களைப் பின்பற்ற வேண்டும். சட்டத்தின் பார்வையில் ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பின்வரும் விளம்பரங்கள் தொடர்வண்டிகளின் உள்ளேயோ/வெளியேயோ காட்சிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை:
மதுபானங்களின் விளம்பரங்கள்.
காம உணர்வைத் தூண்டும் பின்னணிக் காட்சிகளுக்கு மத்தியில் வரும் விளம்பரங்கள்.
மற்ற போக்குவரத்து முறைகளிலிருந்து வரும் போட்டி விளம்பரங்கள்.
ரயில் விபத்துகளுக்கு எதிரான காப்பீட்டுத் திட்டங்களை வழங்கும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் விளம்பரம்.
சிகரெட்டுகள், பீடிகள் மற்றும் இதர புகையிலைப் பொருட்களின் விளம்பரங்கள்.
இருப்பினும், ஏதேனும் மீறல் ஏற்பட்டால், உடனடித் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தத் தகவலை, மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், வெள்ளிக்கிழமை அன்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது வழங்கினார்.
எஸ்.சதிஸ் சர்மா
