சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கேளையூர் கிராமத்தில் தொல்குடிகளின் பண்பாட்டை அறியும் நோக்கோடு ஏற்காடு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, புளியூர் ராமகிருஷ்ணன், ராஜகார்த்திக் ஆகியோர் கேளையூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், பழனி, சுந்தரம், வரதராஜ் உள்ளிட்டோரின் உதவியோடு கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, திரெளபதி அம்மன் கோவில் அருகில் கல்வெட்டு ஒன்றினை கண்டுபிடித்தனர். கிராம மக்கள் அந்த கல்லை சந்தனக்கட்டையை தேய்த்து சந்தனம் எடுக்க பயன்படுத்தி வந்துள்ளனர்.
கல்வெட்டு குறித்து ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
“ இந்த கல்வெட்டு 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும், பாண்டியர் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டாகும். கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள தகவல் என்ன வென்றால், செடையின் பன்மரான திரிபுவன சக்கரவர்த்தி சிரி சுந்தர பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் சேலநாடு என்றும், இப்பகுதியில் சேலஞ்சுற்றி என்பவர் பொறுப்பாளராக இருந்துள்ளார். மேலும் தற்போதுள்ள கோவிலூர் கிராமம் பெருமாமலை என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வானீஸ்வரர் என்ற சிவன் கோவில் அமைந்துள்ள இறைவனை கூடலுடையார் என்று அழைத்துள்ளனர்.
மேலும் கோவில் வழிபாட்டு செலவிற்காகவும், பெருமாமலை நாயனார் செலவிற்காகவும் பவள வாயர் என்பவர் தேவதானமாக நிலம் வழங்கப்பட்டுள்ளது எனவும் இந்த நிலமானது கேளையூர் பகுதியில் உள்ள பாறைக்கரை என்ற இடத்தில் உள்ள வடக்கு பகுதி இரண்டு சூலக்கல்லுக்கு தானமாக விடப்பட்டுள்ளது என்றும் இந்நிலத்தில் விளையும் பொருட்களை அமுது படைக்க ஒரு பருக்கை குறைவின்றி வழங்க வேண்டும்.” இவ்வாறு கூறினார்.
மேலும் இதே பகுதியில் 2500 ஆண்டுகள் பழமையான 6 அடி உயரம் கொண்ட நெடுங்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தொன்மையான நாகரீகத்தை கொண்ட தொல்குடிகள் இங்கு வாழ்ந்துள்ளார்கள் என்பதை கண்டறிய முடிகிறது. மேலும் இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டால் பல அரிய வரலாற்று தகவல்கள் கிடைக்கலாம் என வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
-நவீன் குமார்.
