கர்ப்பிணி பெண் உயிர் பலிக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ்.
திருச்சி, திருவெறும்பூர். கணேசபுரம் பெல் ரவுண்டானா அருகே வாகனச் சோதனையின்போது நிறுத்தாமல் சென்ற இருசக்கர வாகனத்தை போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்று எட்டி உதைத்ததால், சாலையில் விழுந்த உஷா என்ற கர்ப்பிணி பெண் மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கொந்தளித்து திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் கலவரம் வெடித்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த கலவரத்தில் 14 புறநகர் பேருந்துகளும், 12 நகர பேருந்துகளும், 4 காவல்துறை வாகனங்களும், 1 வருவாய்துறை வாகனமும் சேதமடைந்தது. ஒரு பெண் போலிசார் உள்பட காவல்துறை சார்பில் 3 பேர் காயமடைந்தனர். இது சம்மந்தமாக 22 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போலிசார் தடியடி நடத்தியதில் போராட்டத்தில் ஈடுப்பட்ட பலபேருக்கு இரத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்ப்பிணி பெண் உயிர் பலிக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை மார்ச் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது திருச்சி அரசு மருத்துவ மனை வளாகத்தில் ஏராளமானோர் கூடியுள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கர்ப்பிணி பெண் உயிர் பலிக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், கைது செய்யப்பட்ட 22 நபர்களை வழக்கு பதிவு செய்யாமல் உடனே விடுவிக்க வேண்டும். அதுவரை உடலை வாங்கமாட்டோம் என்று ஒருமித்த குரலில் கூறுகின்றனர். இதனால் அப்பகுதி பதட்டமாக உள்ளது.
-ஆர்.சிராசுதீன்.
-ச.ராஜா.
