தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–
காஷ்மீர் முதல்–மந்திரி முப்தி முகம்மது சயீத் டெல்லியில் இன்று திடீரென மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மத்திய– மாநில அரசுகளில் நீண்ட காலம் பணியாற்றி அனுபவம் பெற்றவர்.
காஷ்மீர் மாநில மூத்த தலைவரான அவர் அம்மாநிலத்தில் அமைதி தவழ தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார். அவரது மரணத்தால் நாடு பெரிய தலைவரை இழந்துள்ளது. அவரது மகள் மெகபூபா முப்திக்கும் மற்றும் அவர் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தனது இரங்கல் செய்தியில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
———–
மெகபூபா முப்தி முதல்வர்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் டிசம்பர் 24-ம் தேதி சேர்க்கப்பட்டு, கடந்த 2 வாரங்களாக தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத், இன்று காலை மரணமடைந்தார்.
மரணம் அடைந்த முப்தி முகமது சயீத்க்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 3 மகள்களில் ஒருவரான மெகபூபா முப்தி காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவராக உள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், முதல்வர் முப்தி முகமது சயீத் தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக கூட்டணி ஆட்சி நடைப்பெற்று வந்தது. முப்தி முகமது சயீத் மரணமடைந்துள்ள நிலையில், அவரது மகளும், எம்.பி.யுமான மெகபூபா முப்தியை முதல்வராக்க, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர்கள் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
——
பிரதமர் நரேந்திரமோதி அஞ்சலி.
இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘முப்தி முகமது சயீதின் மரணத்தால் நாட்டிலும், காஷ்மீரிலும் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தனது தலைமை மூலம் அவர் காஷ்மீர் மக்களின் ரணங்களுக்கு சிகிச்சை அளிப்பவராக இருந்தார். நாம் எல்லாரும் அவரை இழந்து விட்டோம்’’ என்று கூறியுள்ளார்.
மேலும், டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு சென்று, முப்தி முகமது உடலுக்கு பிரதமர் நரேந்திரமோதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முப்தி முகமது குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் பிரதமர் நரேந்திரமோதி ஆறுதல் கூறினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.
