விசாரணை நடத்துவார்கள், விசாரணை நிறைவில் எதுவும் இருக்காது: இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  நம்பிக்கை!

Mahinda press meet

PCI IN SL

இலங்கையில் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 1,247 புகார்கள் கிடைத்துள்ளன. கிடைத்துள்ள புகார்களில் சுமார் 200 முறைப்பாடுகளை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

200 முறைப்பாடுகளிலும் 50 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனிப்பட்ட பிரச்சினை தொடர்பிலேயே அதிகமான புகார்கள் கிடைத்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளில் ஒரு முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னம் மீது சுமத்தப்பட்ட பாரிய ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதோடு அவர் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சியில் ஔிபரப்புச் செய்யப்பட்ட விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷ ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பு நேற்றும்(19.11.2015) அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் நேரில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் அவரது வழக்கறிஞர் (சட்டத்தரணி) ஆஜராகியிருந்ததார்.

காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள அவன்காட் கப்பல்.

காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள அவன்காட் கப்பல்.

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸங்க சேனாதிபதியுடன் கோத்தபய ராஜபக்ஷ.

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸங்க சேனாதிபதியுடன் கோத்தபய ராஜபக்ஷ.

இதேவேளை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸங்க சேனாதிபதிக்கு, பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பு இன்று (20.11.2015) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக நிஷங்க சேனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டி தலதா மாளிகையில் நேற்று (19.11.2015) வழிபாடுகளில் ஈடுபட்டு திரும்பிய போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது, அவன்ட் கார்ட் நிறுவனம் இந்த நாட்டுக்கு பாரியளவில் சேவையாற்றியுள்ளது. ஏதேனும் பிழைகள் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

மாறாக நிறுவனங்களை மூடி விடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. நிறுவனத்தை மூடுவதனால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தொழில்களை இழக்க நேரிடும்.

ராஜபக்ஷ குடும்பத்தில் எவரும் ஊழல் மோசடிகளுடன் தொடர்புபடவில்லை. நேரடியாகவோ மறைமுகமாகவோ நாம் ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை. விசாரணை நடத்துவார்கள், விசாரணை நிறைவில் எதுவும் இருக்காது. இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அப்படியானால், ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது நடத்தப்படும் விசாரணைகள் அனைத்தும் நாடகம்தானா?

இதற்கு இலங்கை அரசாங்கம் என்ன பதில் சொல்லப்போகிறது.

-வினித்.