மத்திய அரசு சேவை வரியை 0.5% சதவீதம் உயர்த்தி உள்ளது. இந்த 0.5% சதவீத சேவை வரி உயர்வு வருகின்ற 15–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இந்த 0.5% சதவீத சேவை வரி உயர்வின் மூலம் கிடைக்கும் தொகை முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக செலவிட உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த கூடுதல் 0.5% சதவீத சேவை வரியின் மூலம் இந்த நிதி ஆண்டில் அரசுக்கு ரூ.400 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இது இந்திய மக்களை ஏமாற்றும் செயல். பல லட்சம் கோடி கள்ளப்பணத்தைத் திருட்டுத்தனமாகப்பதுக்கி வைத்திருக்கும் நபர்களுக்கு பல வித சலுகைகளை அறிவித்து, அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி வரி வசூல் செய்யும் மத்திய அரசு, நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், இப்படி ஒரு வருடத்திற்குள் இரண்டு முறை சேவை வரியை உயர்த்தியிருப்பது எந்த வகையில் நியாயம்?
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வரிகளையும் குறைப்போம், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பதுக்கி வைத்திருக்கும் கள்ளப்பணத்தை மீட்டு, ஏழைமக்கள் எல்லோருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுப்போம் என்று எழுத்துப்பூர்வமாக வாக்குறுதிக் கொடுத்தீர்களே அது என்னாயிற்று?
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதிவு முடியும் வரை மௌனமாக இருந்து விட்டு, வாக்கு பதிவு முடிந்தவுடனேயே வரியை உயர்த்தியிருப்பது துரோகமில்லையா?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கும், தற்போதைய பிரதமர் நரேந்திரமோதி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சிக்கும் கடுகளவும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.
இதனால் வருகிற 15–ந் தேதி முதல் சேவை வரியின் கீழ் வரும் அனைத்து பணிகள் மற்றும் சேவைகளுக்கும் 14½ சதவீதம் சேவை வரி செலுத்த வேண்டும். இதன் காரணமாக தொலைபேசி கட்டணம், சுற்றுலா கட்டணம், காப்பீடு கட்டணம் உள்ளிட்டவை உயரும்.
இதையெல்லாம் பார்க்கும் போது வெள்ளையர்களைப் பார்த்து, வீரப்பாண்டிய கட்டப்பொம்மன் பேசிய வசனம்தான் என் நினைவிற்கு வருகிறது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
