நெய்வேலி நிலக்கரி கழகத் தொழிலாளர்களுக்கு திருப்தியான, நியாயமான சம்பளம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்!

neyvelli lignite corporation.jpg1

jj

தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

pr230715_368_000001

நெய்வேலி நிலக்கரி கழகத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ள விவகாரத்தில் தாங்கள் உடனே தலையிட வேண்டும் என்பதற்காக இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதியுள்ளேன். நெய்வேலி நிலக்கரி கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் விரைவான மற்றும் திருப்தியான ஊதிய திருத்தம் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை 20.07.2015 முதல் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

நெய்வேலி நிலக்கரிக் கழகம், தமிழ்நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை தரும் முக்கியமான ஆதாரமிடமாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள். நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்திடம் இருந்து தமிழகம் 1,450 மெகாவாட் மின்சாரம் வாங்குகிறது.

என்.எல்.சி. தொழிலாளர்களுக்கான ஊதிய திருத்த ஒப்பந்தம் 01.01.2012–ம் ஆண்டில் இருந்து நிலுவையில் இருப்பதாக எனக்குத் தெரியவந்துள்ளது. 2014–ம் ஆண்டு அவர்களுக்கு இடைக் கால நிவாரணம் அளிக்கப்பட்டது. என்றாலும், என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு இதுவரை முழுமையான ஊதிய ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் என்.எல்.சி.லாபம் தரும் ஒன்றாக உள்ளது.

ஆகையால், தாங்கள் உடனே இந்த விவகாரத்தில் தலையிட்டு, என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு திருப்தியான, நியாயமான சம்பளம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். இதற்காக தாங்கள் நிலக்கரி அமைச்சகத்துக்கு தேவையான அறிவுறுத்தல்களை உடனே வழங்கி, தமிழகத்தின் தொழில் சூழலை கருத்தில் கொண்டு, பிரச்சினையை விரைவாகவும், அமைதியாகவும் தீர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், தமிழ்நாட்டில் மின்வெட்டு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.