நாட்டின் நீடித்த கடல்சார் மேம்பாட்டிற்கான முன்மாதிரியாக வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் உருவெடுத்துள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துதல், பசுமை உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் துறைமுகத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் கல்வி, புதுமைக் கண்டுபிடிப்பு முன்முயற்சிகளை அர்ப்பணித்த திரு சோனோவால், துறைமுகத்தின் முதல் நிலைத்தன்மை அறிக்கையின் கண்டுபிடிப்புகளை எடுத்துரைத்தார். துறைமுகத்தின் எரிசக்தி நுகர்வுக்கு நிகரான தேவையில் சுமார் 94 சதவீதத்தை தற்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஈடுசெய்கிறது என்றும், அதே நேரத்தில் நிகர கார்பன் வெளியேற்றம் சுமார் 45% குறைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு டன் சரக்கிற்கான கார்பன் அடர்த்தி பாதி அளவாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இது நாட்டின் பசுமை கடல்சார் மாற்றத்தில் வ.உ.சி துறைமுகத்தின் முன்னோடி நிலையை வலுப்படுத்துகிறது.
நிலைத்தன்மை, புதுமைக் கண்டுபிடிப்பு, சமூக நலன் ஆகியவற்றின் அடிப்படையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும்போது எதை அடைய முடியும் என்பதை வ.உ.சி. துறைமுகம் நிரூபித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நிகர கரியமில வாயு வெளியேற்றத்தை 45 சதவீதம் குறைத்துள்ள இத்துறைமுகத்தின் சாதனை, பசுமையான, பொறுப்புடன் கூடிய கடல்சார் வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என்று அவர் கூறினார். இந்த முன்முயற்சிகள் தொழில்நுட்பம், சுற்றுச்சூழலில் முதலீடு செய்யும் அதேவேளையில், நவீன, நீடித்த, எதிர்காலத்திற்குத் தயாரான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிப்பதாக திரு சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.
2026-27-ம் கல்வியாண்டிற்காக, வ.உ.சி. துறைமுக கேந்திரிய வித்யாலயாவில் கல்வி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது இந்நிகழ்ச்சியின் ஒரு முக்கிய சிறப்பம்சமாகும். கேந்திரிய வித்யாலயா சங்கத்தின் ஒப்புதலுடன் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், தொடக்கத்தில் துறைமுகப் பள்ளி வளாகத்திலிருந்து செயல்பட்டு, துறைமுக ஊழியர்கள், மத்திய அரசுப் பணியாளர்கள், உள்ளூர் சமூகத்தினரின் குழந்தைகளுக்குத் தரமான சி.பி.எஸ்.இ. கல்வியை வழங்கும் என்று அவர் கூறினார். இந்த முன்முயற்சி, தூத்துக்குடியில் கல்வி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, குறைந்த கட்டணத்தில் உயர்தரக் கல்விக்கான அணுகலையும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக திரு சர்பானந்த சோனோவால் குறிப்பிட்டார்.
எம்.பிரபாகரன்
