நாடுகளின் பொருளாதார நலனுக்கும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் கடல்சார் பாதுகாப்பு முக்கியமானது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

கேரள மாநிலம் எழிமலையில் உள்ள இந்தியக் கடற்படை அகாடமியில், பயிற்சியை நிறைவு செய்த வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று (நவம்பர் 28) நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பயிற்சியை நிறைவு செய்த இந்தியக் கடலோரக் காவல்படை வீரர்கள், நட்பு நாடுகளைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தது பாராட்டுக்குரியது என்று அவர் கூறினார்.

பயிற்சியை முடித்தவர்களில் ஏராளமான இளம் பெண்கள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் சாதனை, நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகவும், மேலும் பல பெண்கள் சவாலான பொறுப்புகளை ஏற்க ஊக்கமளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

உலக வர்த்தகத்தின் பெரும்பகுதி கடல் வழியாக நடைபெறுவதாகக் கூறிய அவர், கடல் வழிப் பாதைகளின் பாதுகாப்பு நாடுகளின் பொருளாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடையது என்றார். கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைப் பாதித்து, விலைகளை உயர்த்தி, சாமானிய மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

கடற்படைப் பணியாளர்கள் நேர்மை, தொழில்முறைத் திறன், துணிச்சல், மனிதநேயம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார். தலைமைப் பொறுப்பு என்பது உத்தரவிடுவது மட்டுமல்ல எனவும், பொறுப்பேற்று முன்னுதாரணமாகத் திகழ்வதும் ஆகும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இந்தியக் கடற்படையின் சீருடை, 140 கோடிக்கும் அதிகமான மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் சுமப்பதாகக் குறிப்பிட்ட குடியரசித் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, கடற்படையின் உயரிய மரபுகளைக் காப்பாற்ற வேண்டும் என இளம் வீரர்களைக் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply