2028-29க்குள் ரூ.3 லட்சம் கோடி பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ரூ. 50,000 கோடி ஏற்றுமதி எதிர்பார்க்கப்படுகிறது!- பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

2024 பிப்ரவரி 24  அன்று புது தில்லியில் ஒரு தனியார் ஊடகம் ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்,  “பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு குறுகிய கால பலன்களை அல்ல, நீண்ட கால ஆதாயங்களில் கவனம் செலுத்துகிறது” என்று கூறினார்.

மேலும் பேசிய திரு. ராஜ்நாத் சிங், ‘நீண்ட ஆட்சிக்கும்

நீண்ட கால ஆதாயங்களுக்கும் முன்னுரிமை அளிப்பது’ என்பது தற்போதைய அரசாங்கத்திற்கும் முந்தைய காலகட்டங்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

கடந்த காலத்தைப் போல வெறும் ஐந்து ஆண்டுகளுக்கு குறுகிய கால ஆதாயங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தற்போதைய அரசு நீண்டகாலங்களுக்கு கொள்கைகளை வகுத்து செயல்படுத்தியுள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில் நீண்ட கால ஆதாயங்களுக்காக பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புப் படையின் தலைமைப் பதவியை உருவாக்குதல் மற்றும் ராணுவ விவகாரத் துறையை அமைத்தல் உள்ளிட்ட மூன்று படைகளுக்குமிடையே கூட்டுத்தன்மை, ஒருங்கிணைப்பு மற்றும் சுமூகமான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட சீர்திருத்தங்களை அவர் விவரித்தார்.

பாதுகாப்பு உற்பத்தித் துறையில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் குறித்து, பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர், சேவைகளின் ஐந்து நேர்மறை உள்நாட்டுமயமாக்கல் பட்டியல்களில் 500 க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் நான்கு பிற பட்டியல்களை உள்ளடக்கிய, பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கான 4,600 க்கும் மேற்பட்ட பொருட்கள் ஆகியவை  நம் படைவீரர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் என்றார்.

மூலதன கையகப்படுத்தல் பட்ஜெட்டில் 75% உள்ளூர் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் முடிவையும் அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு ஆயுதங்கள் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்காது என்று சிலர் கருதுவதாக அவர் மேலும் கூறினார். இருப்பினும், உள்நாட்டுத் தொழில்துறையின் திறன்களை அரசு நம்புகிறது மற்றும் அவர்கள் தொடர்ந்து மேம்படுத்தலாம் மற்றும் அதிநவீன தயாரிப்புகளை வழங்க முடியும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தளவாடங்களிலிருந்து எந்தவொரு ராணுவமும் தனது நாட்டை பாதுகாக்க முடியாது என்றும், பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு என்பது இன்றைய காலகட்டத்தில் இந்தியாவுக்கு அவசியம் என்றும் பாதுகாப்பு அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதால், தற்சார்புக்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்புத் தொழில் வழித்தடங்களை அமைப்பது போன்ற முன்முயற்சிகள் மூலம், நவீன ராணுவத் தளவாடங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது மட்டுமின்றி, நட்பு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதை அரசு உறுதிசெய்து வருகிறது என்று திரு ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்தார்.

“முன்பு, இந்தியா ஒரு ஆயுத இறக்குமதியாளராக அறியப்பட்டது. ஆனால் இன்று, பிரதமரின் தலைமையின் கீழ்,  ஆயுதம் ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளோம். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.1,000 கோடியை கூட எட்டவில்லை. இன்று அது ரூ.16,000 கோடியைத் தொட்டுள்ளது. 2028-29 ஆம் ஆண்டில், வருடாந்திர பாதுகாப்பு உற்பத்தி ரூ .3 லட்சம் கோடியையும், பாதுகாப்பு ஏற்றுமதி ரூ .50,000 கோடியையும் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

2023-24 நிதியாண்டில், இதுவரை ரூ .4,35,000 கோடிக்கும் அதிகமான மூலதன கையகப்படுத்தலுக்கு கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார். 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ராணுவத்தை உலகின் வலிமையான ஒன்றாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட அக்னிபாத் திட்டம் குறித்தும் அவர் பேசினார். இந்த முடிவுகள் தேசிய பாதுகாப்பு தொடர்பான அரசின் நீண்டகால அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன என்று அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply