எல்பிஎஸ்என்ஏஏ-ல் 97-வது பொது அடிப்படை பயிற்சியின் நிறைவு விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு.

உத்தராகண்ட் மாநிலத்தின் முசௌரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகவியல் அகாடமியில், 97-வது பொது அடிப்படை பயிற்சி நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்று உரையாற்றினார். அப்போது ஆட்சியாளர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டியது அவசியம் என்றும், அதையே இந்த நாடு அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் சர்தார் வல்லபாய் படேல் 1947 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்த அதிகாரிகளை சந்தித்த போது கூறியதை அவர் நினைவு கூர்ந்தார்.

இந்த அடிப்படை பயிற்சியின் மந்திரம் எதுவென்றால் நாம் அல்ல  நான் என்பதுதான் என்றார். அடுத்த  10 முதல் 15 ஆண்டுகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்க உள்ள நீங்கள், உங்களது கனவைக் கொண்டு இந்த நாட்டை வடிவமைக்க வேண்டும் என்று திருமதி திரௌபதி முர்மு கேட்டுக் கொண்டார். சிக்கனம், திறன் உள்ளிட்டவையே ஆட்சிப் பணியின்  அணிகலன்கள் எனக் குறிப்பிட்ட அவர், இவையே, அதிகாரிகளுக்கு தங்களது பதவிக் காலங்களில் தன்னம்பிக்கையை அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்காக உழைக்கும் போது ஆட்சியாளர்கள், பல்வேறு சவால்களையும் கடினமாக சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும்  தெரிவித்த அவர், அந்த சூழ்நிலைகளின் போது சிக்கனம், திறன் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு முழு தன்னம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆட்சியாளர்கள், ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது  தன்னுடைய கருத்துக்களை மனதில் வைத்திருந்தாலும், உரிமை பறிக்கப்பட்ட சமூகத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு வெற்றிகரமாக தங்கள் இலக்கை நோக்கி பீடு நடைபோடவேண்டும் என்று அவர் கூறினார்.

நல்லாட்சி என்பதே தற்போதைய தேவை என்பதை வலியுறுத்திய அவர், சில சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளே நல்லாட்சியை நிலைநாட்டவிடாத வேராகத் திகழ்வதாகவும் திருமதி திரௌபதி முர்மு குறிப்பிட்டார். எனவே பிரச்சினைகளை புரிந்து கொள்ள பாதிக்கப்படும் நபர்களோடு நேரடித் தொடர்பில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள உலக நாடுகள் போராடி வரும் நிலையில், அதற்குத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

தற்போது பயிற்சி முடித்த அதிகாரிகள் அடுத்த 25 ஆண்டுகளில் நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைவதற்கு ஏதுவான திட்டங்களை அமல்படுத்துவதிலும் கொள்கைகளை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

எம். பிரபாகரன்

Leave a Reply