கெவாடியாவில் அக்டோபர் 31-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி முன்னிலையில் பழங்குடி குழந்தைகளின் வாத்திய இசை நிகழ்ச்சி.

பனஸ்கந்தா மாவட்டத்தின் அம்பாஜி நகரைச் சேர்ந்த பழங்குடி குழந்தைகளின் இசைக் குழு, அக்டோபர் 31-ஆம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னிலையில் கெவாடியாவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளது. தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு பிரதமர் கெவாடியா செல்ல உள்ளார்.

பிரதமர் முன்னிலையில்  குழுவினர் இசைக்கவிருப்பது இது முதன் முறையல்ல. கடந்த செப்டம்பர் 30, 2022 அன்று ரூ. 7200 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக குஜராத் மாநிலம் அம்பாஜிக்கு பிரதமர் சென்றிருந்தபோது, அப்போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்த வேளையில் பிரதமரை வரவேற்று குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

இளம் குழுவினரின் வாத்திய இசையைக் கேட்டு மகிழ்ந்து, அவர்களை பிரதமர் பாராட்டியது மட்டுமல்லாமல், பொதுக்கூட்டம் துவங்குவதற்கு முன்பு அவர்களுடன் நேரில் சென்று உரையாடவும் அவர் தவறவில்லை. தமது இளம் நண்பர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுடன் குழு புகைப்படம் ஒன்றையும் பிரதமர் எடுத்துக்கொண்டார்.

இத்தகைய அபாரமான இசை திறனைக் கற்றுக்கொண்ட பழங்குடி குழந்தைகளின் கதையைப் பகிர்ந்தே ஆக வேண்டும். ஒரு காலத்தில் இந்தக் குழந்தைகள் தங்களது அடிப்படை தேவைகளுக்காகவும், கல்வி கற்கும் வாய்ப்புக்காகவும் போராடினார்கள். அம்பாஜி ஆலயத்தின் அருகே, வருகை புரிவோரின் முன் அவர்கள் அடிக்கடி யாசகம் கேட்பது வழக்கம். இதுபோன்ற குழந்தைகளுக்கு உதவிய அம்பாஜியில் இயங்கும் ஸ்ரீ சக்தி சேவா கேந்திரா என்ற தொண்டு நிறுவனம் ஒன்று, இக்குழந்தைகளுக்கு கல்வி வழங்கியதோடு, அவர்களது தனித்திறமையையும் கண்டறிந்தது. இசைக் குழுவில் திறமை மிக்க பழங்குடி குழந்தைகளும் இந்த நிறுவனத்தால் பயிற்றுவிக்கப்பட்டனர்.

இளைஞர்களின் வாத்திய இசையால் பெரிதும் கவரப்பட்டு, அவர்களைப் பாராட்டிய பிரதமர், வரலாற்று சிறப்புமிக்க தேசிய ஒற்றுமை தினத்தில் கலந்து கொண்டு வாத்திய நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதற்காக, அக்டோபர் 31-ஆம் தேதி கெவாடியாவிற்கு வருமாறு  குழுவினருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

அக்டோபர் 31-ஆம் தேதி கெவாடியா செல்லவுள்ள பிரதமர், சர்தார் பட்டேலின் 147-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அன்னாருக்கு மரியாதை செலுத்துவார். ஒற்றுமை தின அணிவகுப்பில் கலந்து கொள்வதோடு, லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியின் அடிப்படைப் பிரிவில் அரசு பணிக்காக பயிற்சி பெறும் பல்வேறு  அதிகாரிகள் குழுவினருடனும் பிரதமர் உரையாடுவார்.

எம். பிரபாகரன்

Leave a Reply