இந்திய நாட்டின் அதிகாரப்பூர்வ அமைச்சரைப் போலவே செயல்படும்; தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஆணையர் வெங்கடேஸ்வரன்!

இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால், இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு இலங்கை ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் ”இலங்கை னநாயக சோசலிசக் குடியரசு” என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அங்கு ஜனநாயகமும்; சோசலிசமும் இன்றுவரை கேள்விக்குறியாகதான் இருந்து வருகிறது.

1972 க்கு முன்பு வரை உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் சிறீலங்கா அறியப்பட்டு வந்தது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் உயர் ஆணையம் புது தில்லியிலும், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் துணை தூதரகம் மும்பையிலும், தென்னிந்தியாவில் உள்ள இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் துணை உயர் ஸ்தானிகராலயம் சென்னையிலும் அமைந்துள்ளது.

தென்னிந்தியாவில் உள்ள இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் துணை உயர் ஸ்தானிகராலய சென்னை மிஷன், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லேவும், தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஆணையராக வெங்கடேஸ்வரனும் தற்போது இருந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் 12 ம் தேதி தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஆணையராக சென்னையில் பொறுப்பேற்று கொண்ட வெங்கடேஷ்வரன்; இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷேவால் நேரடியாக நியமிக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஆணையரா வெங்கடேஸ்வரனின் நடவடிக்கைகள் மற்றும் அவரது செயல்பாடுகள் தொடக்க முதலே பல்வேறு சந்தேகங்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஆணையராக இருக்க வேண்டிய வெங்கடேஸ்வரன்; தன் அதிகாரவரம்பை மீறி, இந்திய நாட்டின் அதிகாரப்பூர்வ அமைச்சரைப் போலவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

பதவியேற்றவுடன் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கிய வெங்கடேஷ்வரன்; கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன், அப்போதைய கர்நாடக மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரையும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தராஜன் உள்பட, மேற்படி மாநில ஆளுநர்கள் அனைவரையும் நேரில் சந்தித்தார்.

இவர்களை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை; புதிதாக பதவியேற்றுக் கொண்ட ஒருவர்; தன் பணி வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கமான நடைமுறைதான்.

ஆனால், இந்த சந்திப்புக்கு பிறகு நடந்த பல நிகழ்வுகளும், சம்பவங்களும்தான் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே உள்ள அச்சுதாபுரத்தில், 21,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட, சர்வதேச தரத்தில் அமைந்துள்ள ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனமான ”BRANDIX PARKஎன்ற பிராண்டிக்ஸ் இந்தியா ஆப்பரேல் சிட்டி (Brandix India Apparel City -BIAC) நிறுவனத்தை, தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஆணையர் வெங்கடேஸ்வரன் நேரில் பார்வையிட்டார்.

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் புதுச்சேரிக்கு சென்ற தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஆணையர் வெங்கடேஸ்வரன், காரைக்கால் மாவட்டம், வாஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் கப்பல் துறைமுகத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த பயணத்தின்போது எதிர்காலத்தில் இலங்கைக்கு எளிதாக செல்வதற்கு புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்குவது பற்றியும், இலங்கை யாழ்ப்பாணம்- காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஏற்படுத்துவது குறித்தும், காரைக்கால் மற்றும் தலைமன்னார் அல்லது காங்கேசன்துறை இடையே படகு சேவைகள் விடுவது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காரைக்கால் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் அர்ஜுன் சர்மாவை சந்தித்தும் பேசினார். முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், மண்டல காவல் கண்காணிப்பாளர் வீரவல்லபன் ஆகியோர் உடனிருந்தனர்.

25 ஜூலை 2021 அன்று திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அமைந்துள்ள கோத்தாரி சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் ஆலைகளில் ஒன்றான, மிகப்பெரிய கரிம உர ஆலையை, அந்த ஆலையின் தொழில்நுட்ப பொது மேலாளர் வி.ராமச்சந்திரன் மற்றும் துணை பொது மேலாளர் எஸ். புஷ்பராஜ் ஆகியோருடன் சென்று, தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஆணையர் வெங்கடேஸ்வரன் நேரில் பார்வையிட்டார்.

Thermal Power Plant (MTPP)-Tuticorin.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய அனல் மின் நிலையமான தூத்துக்குடியில் அமைந்துள்ள Mutiara Thermal Power Plant (MTPP) அனல் மின் நிலையத்தை தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஆணையர் வெங்கடேஸ்வரன் ஜூன் 24 அன்று நேரில் பார்வையிட்டார்.

அந்நிறுவனத்தின் திட்ட இயக்குநர் ஜே.ஒய்.எம்.அப்துல் காதர் மற்றும் கப்பல் போக்குவரத்து அலுவலர் அஹ்மத் ஈஜாஸ் ஆகியோரையும் சந்தித்தார்.

மேலும், 600 மெகாவாட் மின்சாரத்தை இலங்கைக்கு கடத்துவது குறித்தும் மற்றும் நிலக்கரி இறக்குமதி, எரிபொருள் மேலாண்மை மற்றும் மின் உற்பத்தி பற்றியும் அவர்களுடன், தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஆணையர்வெங்கடேஸ்வரன் விவாதித்தார்.

High Commissioner of India to Sri Lanka Gopal Baglay called on Sri Lanka Foreign Minister Dinesh Gunawardena on 03 August, 2021.

இந்நிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, 03 ஆகஸ்ட் 2021 அன்று, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஆணையர் வெங்கடேஸ்வரன் இதுவரை சேகரித்து வழங்கிய தகவல்கள் அனைத்தையும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிடம் நேரில் ஒப்படைத்துள்ளார்.

ஏற்கனவே, இலங்கை துறைமுகங்களை சீனா அபகரித்து கட்டமைத்து வருகின்ற இந்நேரத்தில், இலங்கையை தன்வசப்படுத்தி, இந்தியாவிற்கு எதிராக பல்வேறு திட்டங்களை தீட்ட சீனா திட்டமிட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாகத்தான் வெங்கடேஸ்வரனை தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஆணையராக இலங்கை அரசாங்கம் நியமனம் செய்து இருக்குமோ?! என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தற்போது ஏற்பட்டிருப்பதால், இங்கு நடக்கும் பல விஷயங்களை அலுவல் ரீதியாகவும்; ரகசியமாகவும் இலங்கை அரசுக்கு தெரிவிக்க தனது விசுவாசிகளில் ஓருவரான வெங்கடேஸ்வரனை தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஆணையராக, ராஜபக்சே தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறாரோ?! என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

நமது மத்திய, மாநில அமைச்சர்களை உடன் அழைத்துச் செல்லாமல், தென் இந்தியாவில் உள்ள பல தனியார் நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் நேரடியாக ஆய்வு செய்யும் அதிகாரமும், அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தும் துணிச்சலும், தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஆணையர் வெங்கடேஸ்வரனுக்கு எங்கிருந்து வந்தது?! இது உண்மையிலுமே வரம்பு மீறிய செயல்; வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதர்கள் அனைவரும், வெங்கடேஸ்வரனை போலவே செயல்படத் தொடங்கினால், இந்தியாவின் நிலை என்னாவது?!

வெங்கடேஷ்வரனின் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிக்குமானால், எதிர்காலத்தில் இந்தியாவின் இறையாண்மைக்கும்; பாதுகாப்பிற்கும் மிக பெரிய அச்சுறுத்தலாக இது மாறக்கூடும்.

எனவே, இவரது விசியத்தில் மத்திய, மாநில அரசுகள் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்பாகவும் இருப்பது நல்லது.

”காடைக்கு கலக்கம்பு போட்டு வளர்த்தாலும்; காடை காட்டைதான் பார்க்கும்; அதேபோலதான் இலங்கையும்”

இலங்கைக்கு, இந்தியா எவ்வளவுதான் உதவி செய்தாலும்; இலங்கை சீனாவுக்குதான் விசுவாசமாக இருக்கும்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply