நரேந்திர மோதி தமிழ் ஈழத்தை ஆதரிப்பார் என்று நான் கூறவும் இல்லை! அவர்களது பொது சிவில் சட்டத்தை நான் ஆதரிக்கவும் இல்லை : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாக்கு மூலம்!

narendra-modi-vaikoதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜோயலை ஆதரித்து,   தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் 17.04.2014  அன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் வைகோ பேசினார்.

நரேந்திர மோதி தனக்கு திருமணம் ஆனதை மறைத்துவிட்டார் என்றும், நரேந்திர மோதி பெண்களை மதிக்காதவர் என்றும், மனைவியை ஒதுக்கி வைத்தவர் நாளை பெண்களை எப்படி மதிப்பார்? என்றும் பல்வேறு கட்சிகள் விமர்சிக்கின்றன. இந்நிலையில் நரேந்திர மோதிக்கு ஆதரவாக வைகோ பேசியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

1.நரேந்திர மோதி திருமணம் செய்ததை மறைத்தவர், இவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவரா? என்று கருணாநிதி கேட்கிறார். நரேந்திரமோதிக்கு நடந்தது பால்ய விவாகம். குடும்ப வாழ்க்கை நடத்தாமல் 19 வருடம் தாயை கூட பார்க்காமல் இருந்தார். தனி மனித ஒழுக்கம் நிறைந்தவர் நரேந்திர மோதிஎன்று வைகோ கூறியுள்ளார்.

இதை கேட்க கருணாநிதிக்கு எந்த அருகதையும் இல்லைதான். ஆனால், இந்த நாட்டை ஆளத்துடிக்கும் நரேந்திர மோதி, தன்னைப்பற்றிய முழு விபரத்தையும் இந்த நாட்டு மக்களுக்கு தெரிவிக்காமல் மறைப்பது திருட்டு தனம் இல்லையா? இதுக்கு பெயர்தான் தனி மனித ஒழுக்கமா? இப்படிபட்டவருக்கு வைகோ வக்காலத்து வாங்கலாமா?

அது பால்ய திருமணமாக இருந்திருந்தாலும் தேர்தல் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை ஒரு இந்தியனுக்கு உண்டா? இல்லையா? சட்டம் படித்த வைகோவிற்கு இது தெரியுமா? தெரியாதா? நரேந்திர மோதிக்கு வக்காலத்து வாங்கும் வைகோ இந்த அளவுக்கு பா.ஜ.க-வுக்கு அடிமை ஆவார் என்று தமிழர்கள் யாரும் நினைக்க வில்லை.

காந்தி கூட பால்ய திருமணம் செய்து கொண்டவர்தான். 12 வயதுக்குள் 3 பெண்களை திருமணம் செய்து கொண்டார்.அடுத்து,அடுத்துஅவர்கள் அனைவரும் இறந்து போன பிறகு, கடைசியாக தனது 13 ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். காந்தி அவரது வாழ்க்கை குறித்த அனைத்து உண்மைகளையும் பகிரங்கமாக அறிக்கையிட்டதால்தான் அவரை நாம் ‘மகாத்மா’ என்று அழைக்கின்றோம்.

கோட்சை வழியை கொள்கையாக கொண்ட நரேந்திர மோதிக்கு காந்தியை பற்றி கூறுவது தவறுதான்!

2.ஈழத்தில் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்க ஆயுதம், பணம் கொடுத்தது சோனியா காந்தி கூட்டம். மீனவ மக்களின் கண்ணீரிலும், துன்பத்திலும் பங்கு பெற்றவன் நான். நரேந்திர மோதி தமிழ் ஈழத்தை ஆதரிப்பார் என்று நான் கூறவும் இல்லை! அவர்களது பொது சிவில் சட்டத்தை நான் ஆதரிக்கவும் இல்லை. ஆனால், இலங்கைக்கு வாஜ்பாய், ஆயுதம் தர மாட்டோம், பணம் தர மாட்டோம் என்று கூறினார். அதனை நரேந்திர மோதி பின்பற்றுவார்  என்று நம்புகின்றேன். கூட்டணிக்காக கொள்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று வைகோ கூறியுள்ளார்.

இலங்கையில் தனி தமிழ் ஈழத்தை பா.ஜ.க. ஆதரிக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனெனில், இலங்கையை பிரிப்பதில் பாரதிய ஜனதாவுக்கு உடன்பாடு இல்லை. இலங்கை தமிழர் பிரச்னைக்கு எந்த வகையான தீர்வு என்றாலும் அது அந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்” என்று கிட்டத்தட்ட  ராஜபட்ஷேவின் பிரதிநிதிகளைப் போலவே பா.ஜ.க. மூத்தத் தலைவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் பேசி வருகிறார்கள். இதற்கு வைகோ என்ன பதில் சொல்ல போகிறார்? தனி ஈழம் அமைக்க எதிராக இருக்கும் பா.ஜ.க வுடன் வைகோ கூட்டு சேர்ந்துள்ளது பச்சை துரோகம்  இல்லையா?

அரசியலில்ஆட்சி அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் வைகோவிற்கு என்று நடுநிலையாளர்கள் மத்தியில் ஒருவிதமான மதிப்பும், மரியாதையும் இருந்து வந்தது. ஆனால், இந்த முறை பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துக்கொண்டதால் அதெல்லாம் காற்றில் பறந்து போய் விட்டது.

பாவம் அவர் என்ன செய்வார்? கூட இருக்கும் தொண்டர்களையும், நம்பியிருக்கும் அவரது சகாக்களையும் திருப்திப்படுத்தி ஆகவேண்டுமே! அதனால் கண்களை விற்றுவிட்டு சித்திரம் வாங்கவும், குழந்தைகளை விற்று விட்டு தொட்டில்கள் வாங்கவும் வைகோ முடிவெடுத்து விட்டார் போலும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.