சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் ப.சிதம்பரத்தின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்யக்கோரி புகார்!

P.KARTHIKமத்திய நிதி அமைச்சரின் மகனும், சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான கார்த்தி ப.சிதம்பரம் வேட்பு மனு உறுதிமொழி பத்திரத்தில் அசையும், அசையாச் சொத்துகளில் தவறான தகவல்களைக் கொடுத்துள்ளார்.

அதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மாவட்ட ஆட்சியரும், சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான வே.ராஜாராமனிடம், பாட்னா வருமான வரித்துறை ஆணையர் சஞ்சய் குமார் ஸ்ரீவத்சவா இன்று (07.04.2014) திங்கள்கிழமை புகார் மனு கொடுத்துள்ளார்.

சஞ்சய் குமார் ஸ்ரீவத்சவாகார்த்திக் தந்தை ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருப்பதால் தேர்தல் பணிக்காக அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி உள்ளார். 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123 -துணை பிரிவு 7 மற்றும் 125ஏ ஆகியவற்றின்படி பல்வேறு தேர்தல் குற்றங்கள் மேற்கொண்டு தவறான தகவல்களை தனது உறுதி மொழி பத்திரத்தில் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்ரீவத்சவா கூறுகையில் இப்புகார் மனுவினை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவதாகவும், மனுவினை தேர்தல் இணையதளத்தில் வெளியிடுவதாக ஆட்சியர் தெரிவித்ததாகவும் கூறினார்.

-கே.பி.சுகுமார்