முரண்பாடுகளின் மொத்த உருவமாக விளங்கும் பா.ஜ.க. கூட்டணி !

nda tamilnaduதனி தமிழ் ஈழத்தைஅமைத்தே தீருவோம். இதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறுகிறார்.

ஈழத்தமிழர் பிரச்னைக்கு தனி தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசும் கூறுகிறார். இலங்கையில் ஈழதமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் ‘பசுமை தாயகம்’ அமைப்பின் சார்பில் மருத்துவர் அன்புமணி நேரில் சென்று தங்கள் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

dr.anbumaniஆனால், தனி தமிழ் ஈழத்தை பா.ஜ.க. ஒரு போதும் ஆதரிக்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

இலங்கையில் தனி தமிழ் ஈழத்தை பா.ஜ.க. ஆதரிக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனெனில், இலங்கையை பிரிப்பதில் பாரதிய ஜனதாவுக்கு உடன்பாடு இல்லை. இலங்கை தமிழர் பிரச்னைக்கு எந்த வகையான தீர்வு என்றாலும் அது அந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்” என்று பெங்களூரில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெங்கையா நாயுடு  மறுபடியும் உறுதிப்பட கூறியுள்ளார்.

வெங்கையா நாயுடு

வெங்கையா நாயுடு

கிட்டத்தட்ட ராஜபட்ஷேவின் பிரதிநிதிகளைப் போலவே பா.ஜ.க. மூத்தத் தலைவர்கள் பேசி வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அக்கட்சியில் இருக்கும் சுப்ரமணியசுவாமி தான் என்று தெரிகிறது. ஈழதமிழர்கள் பிரச்சனையில் ராஜபட்ஷேவின் கைகூலியாக இருக்கும் சுப்ரமணியசுவாமியின் சொல்படிதான் பா.ஜ.க. மூத்தத் தலைவர்கள் செயல்படுகிறார்கள், எதிர்காலத்திலும் அப்படிதான் செயல்படுவார்கள். எனவே, பா.ஜ.க. வை நம்பி எந்த பிரயோசனமில்லை என்று ம.தி.மு.க. மற்றும் பா.ம.கவை சேர்ந்த தொண்டர்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். ஈழதமிழர்கள் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் கண்ணோட்டத்திற்கும், பா.ஜ.க.யின் கண்ணோட்டத்திற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை. வெங்கையா நாயுடுவின் பேச்சு அவரின் தனிப்பட்ட கருத்தாக இருக்க வாய்பில்லை.

தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்தைப் பொருத்தவரை எவன் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன? எப்படியாவது தனது கட்சி வேட்பாளர்கள் ஜெயித்தால் போதும் என்ற மனநிலையில்தான் ஆரம்பம் காலம் முதலே அரசியல் நடத்தி வருகிறார்.

‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்பது பா.ம.க.வின் கொள்கை!

‘ஓட்டுக்காக யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள், ஓட்டை மட்டும் எங்களுக்கு போடுங்கள்’- இது விஜயகாந்தின் கொள்கை!

கொள்கை அளவில் பா.ம.க.விற்கும், தே.மு.தி.க விற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்பதுதான் எதார்த்தமான உண்மை.

இப்படி முரண்பட்ட இறுக்கமான சூழ்நிலையில் இந்த பாராளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வார்கள் என்பது கேள்வி குறியாகதான் இருக்கிறது.

எது எப்படியோ ‘வன்னியர்கள் ஓட்டு அந்நியர்களுக்கு இல்லை’ என்பதில் வன்னியர்கள் சங்கமும், பா.ம.க. தொண்டர்களும் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். எங்களுக்கு கூட்ணியை விட கொள்கை தான் முக்கியம் என்று வன்னியர்கள் சங்கமும், பா.ம.க தொண்டர்களும் முடிவெடுத்தால், அது தே.மு.தி.க விற்கும், பா.ஜ.க. விற்கும் பாதகமாகதான் போய் முடியும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.