ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் ரூ.68,000 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இயற்கை எரிவாயு, நிலக்கரி, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தல், நாட்டுக்கு அர்ப்பணித்தல், அடிக்கல் நாட்டுதல் ஆகியவற்றின் மூலம் எரிசக்தித் துறைக்குப் பெரும் ஊக்கம் கிடைக்கும்

சாலை, ரயில்வே மற்றும் உயர்கல்வித் துறையின் முக்கியத் திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்

சைலஸ்ரீ அரண்மனை வடிவிலான சம்பல்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

குவஹாத்தியில் ரூ.11,000 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்

காமாக்யா கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உலகத்தரத்திலான வசதிகளை வழங்குவதற்காக காமாக்யா திவ்ய பரியோஜனா திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

விளையாட்டு மேம்பாடு, மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து இணைப்புத் திட்டங்களுக்கு குவஹாத்தியில் முக்கிய கவனம் செலுத்தப்படும்

Posted On: 02 FEB 2024 11:07AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 பிப்ரவரி 3-4 தேதிகளில் ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

பிப்ரவரி 3 அன்று பிற்பகல் 2.15 மணியளவில், ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், ரூ.68,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன் பின்னர் பிரதமர் அசாம் செல்கிறார். பிப்ரவரி 4 ஆம் தேதி காலை 11:30 மணியளவில், குவஹாத்தியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் ரூ .11,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

சம்பல்பூரில் பிரதமர்

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, ஒடிசாவின் சம்பல்பூரில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர், திட்டங்களை தொடங்கி வைத்து, தேசத்திற்கு அர்ப்பணிக்கிறார். எரிசக்தித் துறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

திட்டத்தின் ‘ஜகதீஷ்பூர் – ஹால்டியா மற்றும் பொக்காரோ – தாம்ரா குழாய்ப்பாதைத் திட்டத்தில் தாம்ரா– அங்குல் குழாய்ப் பிரிவை (412 கிலோமீட்டர்)யும், ‘பிரதமரின் கங்கா ஆற்றல்’ திட்டத்தின் கீழ் ரூ.2450 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட ஒடிசாவை தேசிய எரிவாயு தொகுப்புடன் இணைக்கும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். மும்பை – நாக்பூர் – ஜார்ஜுகுடா குழாய் திட்டத்தின் ‘நாக்பூர் ஜார்ஜுகுடா இயற்கை எரிவாயு குழாய் பிரிவுக்கும் (692 கிலோமீட்டர்) பிரதமர் அடிக்கல் நாட்டுவார். ரூ.2660 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்படும் இந்தத் திட்டம், ஒடிசா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கு இயற்கை எரிவாயு கிடைப்பதை மேம்படுத்தும்.

இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, சுமார் 28,980 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் திட்டங்களில் ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் என்டிபிசி தர்லிபாலி சூப்பர் அனல் மின் நிலையம் மற்றும் என்எஸ்பிசிஎல் ரூர்கேலா பிபி-II விரிவாக்கத் திட்டம் ஆகியவை அடங்கும். ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் என்டிபிசி தால்ச்சர் அனல் மின் திட்டத்தின் நிலை-3 திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுவார். இந்த மின் திட்டங்கள் ஒடிசா மற்றும் பல மாநிலங்களுக்கு குறைந்த விலை மின்சாரத்தை வழங்கும்.

27,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் தாளபிரா அனல் மின் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். தற்சார்பு இந்தியா குறித்த பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தும் வகையில், இந்த அதிநவீன திட்டம் நம்பகமான, மலிவான மற்றும் 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்கி, நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பில் முக்கிய பங்கு வகிக்கும்.

எஸ்‌.சதிஷ் சர்மா

Leave a Reply