மணல் திருடும் சமூக விரோதிகள்! மாமுல் வாங்கும் அதிகாரிகள்!- திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணியின் அதிரடி நடவடிக்கை.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கிளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழவிளாங்குளம் மற்றும் அண்ணாநகர் பகுதியில் கல்லணை கால்வாய் ஆற்றிலிருந்து அரசு அனுமதியில்லாமல் மணல் எடுத்து, அதை கரையில் கொண்டு வந்து கொட்டி, அங்கிருந்து வேன் மற்றும் லாரிகளின் மூலம் வெளி இடங்களுக்கு அதிக விலைக்கு மணலை விற்று வருகிறார்கள்.

இந்த மணல் கடத்தல், கிராம உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், திருவெறும்பூர் வட்டாட்சியர் ஷோபா, பொதுப்பணித்துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோருக்கு தெரிந்தேதான் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

மேற்காணும் அதிகாரிகளுக்கு மணல் கடத்தல்காரர்களின் மூலம் மாதந்தோறும் மாமுல் போய் சேர்ந்துவிடுவதால் இதை அவர்கள் கண்டுக்கொள்வதும் இல்லை.

இந்த மணல் கடத்தல் குறித்து, அப்பகுதி பொதுமக்களின் சார்பில், பலமுறை திருவெறும்பூர் வட்டாட்சியர் ஷோபா மற்றும் திருவெறும்பூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் வெறுப்படைந்த பொதுமக்கள், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணியிடம் புகார் அளித்தனர். இதுக்குறித்து உடனே நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி உத்தரவிட்டார். ஆனால், மணல் கடத்தல் நாளுக்கு, நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறதே தவிர, குறைந்தப்பாடில்லை.

இதுக்குறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணிக்கு, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில், இன்று (04.05.2018) திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்று வரும் சாலை மற்றும் பாலம் குறித்த திட்டப்பணிகளை  ஆய்வு செய்ய வந்த திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி, அப்பகுதியில் நடைப்பெற்றுவரும் மணல் கடத்தலை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுநாள் வரை மணல் கடத்தலை கண்டு கொள்ளாமல் இருந்த திருவெறும்பூர் வட்டாட்சியர் ஷோபாவையும் மற்றும் அப்பகுதி வருவாய்துறை அதிகாரிகளையும், மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி கண்டித்தார்.

அனுமதியில்லாமல் யார் மணல் அள்ளினாலும் அவர்களை உடனடியாக போலீசாரிடம் பிடித்துகொடுப்பதுடன், மணல் அல்ல பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து விடுவேன் என்றும் கடுமையாக எச்சரித்தார்.

சாலையில் கொட்டப்பட்டுள்ள மணலை தினமும் லாரி வைத்து அள்ளுங்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம் என்று, திருவெறும்பூர் வட்டாட்சியர் ஷோபாக்கு, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி உத்தரவிட்டார்.

அப்போது திருவெறும்பூர் வட்டாட்சியர் ஷோபா, இந்த மணல்களை அள்ளுவதற்கு செலவு அதிகமாகிறது பணம் இல்லை என்று கூறினார்.

இதையடுத்து உடனடியாக திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளரை தொடர்பு கொண்டு, உங்கள் வேலைக்கு இந்த மணலை கணக்கு போட்டு பயன்படுத்திகொள்ளுங்கள் என்று, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி கூறினார். அவரும் உடனே எடுத்து கொள்வதாக உறுதியளித்தார்.

ஆற்றில் இருந்து மணல் கடத்தி வரும் பாதைகளை கான்கீரிட் தடுப்பு வைத்து அடைக்கவும், திருவெறும்பூர் வட்டாட்சியர் ஷோபாக்கு, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி உத்தரவிட்டார்.

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணியின் இந்த அதிரடி நடவடிக்கையை கண்டு, திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக, திருவெறும்பூர் வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விழிபிதுங்கி போய் உள்ளனர்.

முக்கிய குறிப்பு: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பனையக்குறிச்சி ஊராட்சி, சர்க்கார்பாளையம், சிவன்கோவில் என்ற இடத்திற்கும். கீழமுல்லக்குடி ஊராட்சிக்கும் இடைப்பட்டப் பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளை.

திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகில் உள்ள காவிரி பாலம் முதல், காவிரியின் வலது மற்றும் இடது கரைகளை சுமார் 6 கிலோ மீட்டர் தூரம், திருச்சி மாவட்ட எல்லை வரை, காவிரி ஆற்றில் இறங்கி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி நேரில் பார்வையிட்டால், உண்மையிலுமே கண்ணீர் விட்டே அழுதுவிடுவார். ஏனென்றால், அந்த அளவிற்கு காவிரியில் மணல் கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது. கனரக இயந்திரங்களின் மூலம் விதிமுறைகளுக்கு புறம்பாகவும், சட்ட விரோதமாகவும், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஆதரவோடு, மணல் கடத்தப்பட்டு வருகிறது.

மேலும், காவிரி ஆற்றில் காட்டாமணி செடி மற்றும் சீமைகருவேலம் முள்மண்டி, புதராகவும், திட்டுதிட்டாகவும், காடு போலவே இருக்கிறது. இப்படி இருந்தால் எப்படி காவிரியில் தண்ணீர் போய் சேரும்?

எனவே, கோடைகாலம் முடிவதற்குள், காவிரி ஆற்றை தூர்வாரி, தூய்மை செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.பி.சுகுமார், ஆர்.சிராசுதீன், வீ.குணசேகரன், ரா.ரிச்சி ரோஸ்வா, ச.ராஜா. 

 

 

Leave a Reply