சென்னை: காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சனையும், மேகதாது அணை விவகாரமும் தமிழக விவசாயிகளின் பயிர் பிரச்சனை மட்டுமல்ல; தமிழக மக்களின் உயிர் பிரச்சனை என்பதை உணர்ந்து கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள காவிரி நீரைத் திறந்துவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகுமாறு அறிவுறுத்தியிருப்பது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை முறையாகப் பின்பற்றாமல், தமிழகத்திற்கு உரிய காலத்தில் வழங்க வேண்டிய நீரை வழங்குவதில் தாமதம் செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் தமிழக டெல்டா விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி போன்ற சாகுபடிப் பருவங்களில் உரிய நேரத்தில் முழுமையாகப் பயிரிட முடியாமல் பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, காவிரி மேலாண்மை ஆணையம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை நீரை உடனடியாகத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், காவிரி பிரச்சனையில் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து விவசாயிகளின் உரிமைக்காகப் போராட வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் வலியுறுத்தியுள்ளார்.
எஸ்.திவ்யா
