ஏற்றுமதியாளர்களின் ஆதரவை மேம்படுத்தும் வகையில், மத்திய வர்த்தகத் துறையானது, ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்ட விதிமுறைகளில் 2026 நவம்பர் 17-ம் தேதி அன்று 4 திருத்தங்களை மேற்கொண்டது. இதன்மூலம் வாங்குவோர்- விற்போர் சந்திப்புகள், வர்த்தக கண்காட்சி, சந்தை ஊக்குவிப்பு அம்சங்களால் இந்திய ஏற்றுமதி சந்தையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த திருத்த விதிகளின்படி, விற்போர் -வாங்குவோர் சந்திப்புகள், வர்த்தக கண்காட்சி, வர்த்தக குழுக்களில் பங்கேற்பதற்கான விமான கட்டணத்தை திருப்பி பெறுவதற்கு தகுதியான ஏற்றுமதி விற்றுமுதல் ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறுகுறு ஏற்றுமதியாளர்களுக்கு 95 சதவீதம் வரையும், மற்ற தகுதிவாய்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு 80 சதவீதம் வரையும் விமான கட்டணம் திரும்பப்பெறுதல் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலில் கட்டாய உறுப்பினர் காலம் 6 மாதங்களில் இருந்து 3 மாதங்களாக குறைத்து விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு முக்கிய அம்சங்களும் இந்த திருத்த விதிமுறைகளில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, குறைந்த ஏற்றுமதி செறிவுகொண்ட மாவட்டங்களுக்கான வரம்பு 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து 34 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள துறைமுகங்களில் நில சுங்க மையங்கள், ஒருங்கிணைந்த சுங்கச்சாவடிகள் விரிவுபடுத்தப்படும். ஏற்கனவே உள்ள சாலை, ரயில், விமான போக்குவரத்துடன் நீர்வழிப் போக்குவரத்தும் இணைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வான்வழி சரக்குபோக்குவரத்து ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சரக்குகள் புறப்படும் இடத்திற்கும் சென்றடையும் இடத்திற்கும் உள்ள தொலைவு 200 கிலோ மீட்டரில் இருந்து 100 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அம்சங்களால், இந்தியாவின் ஏற்றுமதி மேம்படும் என மத்திய வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.
திவாஹர்
