இந்தியா – மியான்மர் இடையேயான 8-வது கடற்படைக் கூட்டுப்பயிற்சி விசாகப்பட்டினத்தில் நிறைவடைந்தது.

துறைமுகப் பயிற்சி, கடல்சார் பயிற்சி ஆகிய இரு கட்டங்களும் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்தியா – மியான்மர் இடையேயான 8-வது கடற்படைக் கூட்டுப்பயிற்சி (இம்னெக்ஸ்-26), 2026 நவம்பர் 14 அன்று விசாகப்பட்டினத்தில் நிறைவுற்றது.

வங்காள விரிகுடாவில் நடைபெற்ற கடல்சார் பயிற்சிக் கட்டம் இப்பயிற்சியின் நிறைவாக அமைந்தது. இதில் இந்தியக் கடற்படைக் கப்பல்களான ஐஎன்எஸ் ராணா, ஐஎன்எஸ் சுமேதா ஆகியவையும்  மியான்மர் கடற்படைக் கப்பலான யுஎம்எஸ் கிங் சின் பியூ ஷின் ஆகியவையும் இணைந்து செயல்பட்டன.

துறைமுகப் பயிற்சிக் கட்டத்தில் துறைசார் நிபுணர்களின் கருத்துப் பரிமாற்றம், கப்பல்களைப் பார்வையிடுதல், தொழில்முறைக் கலந்துரையாடல்கள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை இடம்பெற்றன. இவை இரு நாட்டுக் கடற்படை வீரர்களிடையே செயல்பாட்டு அறிவு, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வழிவகுத்தன.

கடல்சார் பயிற்சிக் கட்டத்தில் ஒருங்கிணைந்த கடல்வழி உத்திகளும் செயல்பாட்டுப் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இது நடைமுறைகளை மேம்படுத்தவும், ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பங்கேற்ற பிரிவுகளிடையே கூட்டுச் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும் வாய்ப்பளித்தது.

பங்கேற்ற கப்பல்கள், வீரர்கள் தங்களது செயல்பாட்டுப் புரிதலை ஒருங்கிணைத்துக் கொள்ளவும், இரு தரப்புத் திறன்கள், நடைமுறைகளை நன்கு அறிந்து கொள்ளவும் இம்னெக்ஸ்-26 பயிற்சி பயனுள்ள தளமாக அமைந்தது.

Leave a Reply