பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற 21-வது கிழக்காசிய உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
தற்போது நிலவும் நெருக்கடியான சூழல்களில் அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளிக்க உரையாடல், பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு ஆகியவற்றின் அவசியம் குறித்து பிரதமர் சுட்டிக்காட்டினார். தடையற்ற, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, விதிமுறைகள் அடிப்படையிலான இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை ஏற்படுத்த அவர் அழைப்பு விடுத்தார். உலக அரங்கில் அமைதி, நிலைத்தன்மை, ஆகியவற்றை உருவாக்குவதற்கு கிழக்காசிய உச்சிமாநாடு அவசியம் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
உலகம் முழுவதும் உணவு, எரிபொருள், உரப் பாதுகாப்பில் நிலவும் நெருக்கடிகள், மோதல்கள் ஆகியவற்றின் தாக்கம் குறித்து அவர் எடுத்துரைத்தார். சர்வதேச நீர்வழிப்பாதைகளில் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய வர்த்தகக் கப்பல்கள், மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
உக்ரைன், மேற்காசியாவில் நிலவும் மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அமைதியை விரும்பும் மக்களுக்கு தீவிரவாதத்தால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து அவர் எடுத்துரைத்தார்.
கிழக்காசிய உச்சி மாநாடு தளத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரதமர் பரிந்துரைகளை வழங்கினார்.
மாலுமிகள் பாதுகாப்புக்கான கூட்டுப் பயிற்சி மற்றும் அவசரகால மீட்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்புக்கான முன்முயற்சி.
இணைய மோசடிகள், எல்லைதாண்டிய குற்றங்கள் ஆகிய நவீனகால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் கிழக்காசிய உச்சி மாநாடு சார்பாக இணைய குற்றத் தடுப்பு மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்தல்.
லோத்தலில் கடல்சார் பாரம்பரியத் திருவிழா நடத்துதல்.
கிழக்காசிய உச்சி மாநாடு நாடுகளுடனான கல்விசார் ஒத்துழைப்பை மேம்படுத்த நாளந்தாவில் கிழக்காசிய உச்சி மாநாடு சார்பாக பல்கலைக்கழக மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தல் ஆகிய பரிந்துரைகளை பிரதமர் அளித்தார்.
இந்த உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக பிலிப்பைன்ஸ் அதிபர் திரு ஃபெர்டினான்ட் ஆர் மார்கோஸூக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
எம்.பிரபாகரன்
