புதுதில்லியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம் (ஐசிஎம்ஆர்) – தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓராண்டுகால பொன்விழா கொண்டாட்டங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (2026 நவம்பர் 17) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் மலேரியா நீண்டகாலமாக தீவிர பொது சுகாதார சவாலாக உள்ளது என்று தெரிவித்தார். சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் இது நமது நாட்டின் மிக முக்கிய பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்தது என்று கூறினார். கடந்த சில ஆண்டுகளாக மலேரியா தடுப்புப் பணிகளில் இந்தியா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது மகிழ்ச்சிக்குரிய அம்சம் என்று தெரிவித்தார்.
மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைகள், நவீன நோய் கண்டறிதல் தொழில்நுட்பங்கள், திறன்மிக்க மருந்துகள், கொசு ஒழிப்பு இயக்கங்கள், சமூக பங்களிப்பு ஆகியவை இந்நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளதாக கூறினார். மலேரியாவை ஒழிப்பதற்கான பணிகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மலேரியாவுக்கு எதிராக நீண்டகால போராட்டத்தில் தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் மிக முக்கிய பங்காற்றியுள்ளதாக அவர் கூறினார். கடந்த 50 ஆண்டுகளாக மலேரியா ஒட்டுண்ணிகள், கொசுக்கள், நோய் பரவலை கட்டுப்படுத்துதல், சமூகம் சார்ந்த கண்காணிப்பு ஆகியவற்றில் இந்நிறுவனம் முன்னணி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பருவநிலை மாற்றம், திட்டமிடப்படாத நகரமயமாக்கல், பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு எதிராக அதிகரித்துவரும் கொசுக்களின் எதிர்ப்புத்திறன் ஆகிய புதிய சவால்கள் மலோரியாவை ஒழிப்பதற்கான பணியில் புதிய தடைகளை ஏற்படுத்துவதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.
இதுபோன்ற சூழல்களில் சுகாதாரப் பணியாளர்களின் முயற்சிகள் மட்டும் மலேரியா பரவலை தடுக்க முடியாது என்று கூறிய அவர், தண்ணீர் தேங்குவதை தடுத்தல், கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து தூய்மையாமையாக பராமரித்தல், சுற்றுச்சூழலை முறையாக நிர்வகித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று குடியரசுத்தலைவர் வலியுறுத்தினார்.
திவாஹர்
